எண்ணெய் உணவுகள் சாப்பிட்ட பிறகு நீங்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும்
குளிர்காலம் கடுமையாக இருப்பதால், சூடாக பொறித்த உணவுகளை சாப்பிட தோன்றும். சூடான பஜ்ஜி, போண்டா, சாண்ட்விச் என பலவிதங்களில் உள்ளே தள்ளுவோம். எவ்வாறாயினும், அத்தகைய உணவுகளில் எண்ணெய் நிரம்பியிருப்பதை நீங்கள் மறுக்க முடியாது. சரி, இந்த எண்ணெய் உணவுகள், உங்கள் உடலின் செரிமானத்தை பாதிக்க கூடும். அதை தடுக்க சில டிப்ஸ் தருகிறோம். அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சூடான தண்ணீர் குடிக்கவும்
பிரஞ்சு ஃப்ரைஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது பல்வேறு வகையான காய்கறி பஜ்ஜிகள் போன்ற உங்களுக்கு பிடித்த வறுத்த தின்பண்டங்களை நீங்கள் அதிகமாக சாப்பிட்ட பிறகு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பது புத்திசாலித்தனமான முடிவு. இதைச் செய்வதால், உங்களின் செரிமானம் விரைவாகவும், தடையற்றதாகவும் மாறும். குறிப்பாக எண்ணெய் உணவுகளை சாப்பிட்ட பிறகு, செரிமான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு இது சரியான முடிவாக இருக்கும். வெதுவெதுப்பான நீர், இந்த எண்ணெய் உணவுகளை சிறிய மற்றும் எளிதில் செரிக்கக்கூடிய வடிவங்களாக உடைக்கிறது.
தயிர் போன்ற புரோபயாடிக் உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்
உங்களுக்குப் பிடித்தமான எண்ணெய் உணவுகளை ருசித்த பிறகு, அதன் பின்விளைவுகளான அசிடிட்டி, வாயு, உப்புசம் மற்றும் எடைகூடுதல் ஆகியவற்றைத் தடுக்கும் ஒரு "கூல்" ஹேக் இது. ஆயுர்வேதத்தின் பழங்கால மருத்துவ முறையின்படி, வறுத்த சீரகத்துடன் கூடிய தயிர் போன்ற புரோபயாடிக் உணவுகளை உண்பது, உங்கள் செரிமானத்திற்கு நன்மை பயக்கும். தயிரில் உள்ள குடலுக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் சீரகத்தின் கார்மினேடிவ் பண்புகள் உங்கள் செரிமானத்திற்கு உதவும்.
க்ரீன் டீ பருகவும்
கொட்டும் மழை..சூடாக பஜ்ஜி, அதோடு ஒரு டீ...நன்றாகவே இருக்கும். ஆனால், ஒரு மாறுதலுக்கு அந்த டீ-க்கு பதிலாக, ஒரு கப் கிரீன் டீ குடித்து பாருங்கள். காம்பினேஷன் மட்டுமல்ல, அது உங்கள் உடலுக்கும் நல்லது. ஏனென்றால், கிரீன் டீயில் ஃபிளாவனாய்டுகள் நிரம்பியுள்ளன. இது உங்கள் செரிமான அமைப்பில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் சரியான ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உணவை எளிதில் உடைக்க உதவுகிறது. மேலும் இது உங்கள் இரைப்பை, குடல் ஆரோக்கியத்தை, அதன் வலுவான கேட்டசின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களுடன் மேம்படுத்த உதவும்.
உடனடியாக தூங்குவதையோ, குளிர்ச்சியான எதையும் சாப்பிடுவதையோ தவிர்க்கவும்
சிலருக்கு, எண்ணெய் உணவுகள், சோம்பலை உருவாக்கி, தூக்கத்தை வரவழைக்கும். காலையில் சுவையான பூரி சாப்பிட்ட பிறகு, பலருக்கும் அந்த நாள் முழுவதும் தூக்க கலகமாகவே இருக்கும். சிறிது தூங்கி எழுந்தால் சுறுசுறுப்பாக இருக்குமே என தோன்றலாம். இருப்பினும், எண்ணெய் உணவுகள் சாப்பிட்டதும் உறங்குவது, உங்கள் உடலில் எண்ணெய் மற்றும் கொழுப்பு படிவுகளை உண்டாக்கும். அது உடல் பருமன் மற்றும் அதனுடன் வரும் பல்வேறு சுகாதார நிலைமைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், உணவுக்குப் பின் இந்த உறக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல, நீங்கள் குளிர்ச்சியான எதையும் (ஐஸ்கிரீம், குல்ஃபி போன்றவை) சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது உங்கள் செரிமானத்தில் கோளாறுகளை உருவாக்கலாம்.