அலர்ட்! 35 வயதை நெருங்கிவிட்டீர்களா? உடல் வலிமை குறையத் தொடங்கும் நேரம் இது; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
செய்தி முன்னோட்டம்
நமது உடல் வலிமையும், ஆரோக்கியமும் வாழ்நாள் முழுவதும் ஒரே சீராக இருப்பதில்லை. ஸ்வீடன் நாட்டின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் நடத்திய புதிய ஆய்வின்படி, ஒரு மனிதனின் உடல் தகுதி மற்றும் தசை வலிமை ஆகியவை 35 வயதிற்குப் பிறகு குறையத் தொடங்குவது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 47 ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் பின்தொடர்ந்து ஆய்வு செய்ததில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வு
47 ஆண்டுகால விரிவான ஆய்வு
இந்த ஆய்வு, 16 முதல் 63 வயதுக்குட்பட்ட நபர்களைத் தொடர்ந்து கண்காணித்து வந்தது. முந்தைய ஆய்வுகள் வெவ்வேறு வயதுடையவர்களைக் குறுகிய காலத்தில் ஒப்பிட்டுப் பார்த்த நிலையில், இந்த 'ஸ்வீடிஷ் பிசிகல் ஆக்டிவிட்டி அண்ட் ஃபிட்னஸ்' (SPAF) ஆய்வு, ஒரே நபர்களை அரை நூற்றாண்டு காலம் கண்காணித்துள்ளது. இதன் மூலம் மனித உடல் வலிமையின் உச்சக்கட்டம் 35 வயது என்பதும், அதன் பிறகு அது படிப்படியாகச் சரிவைச் சந்திப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்யத் தொடங்க தாமதம் கிடையாது
இந்த ஆய்வின் மிக முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதுதான். 35 வயதிற்குப் பிறகு அல்லது வாழ்வின் பிற்பகுதியில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கியவர்கள் கூட, தங்களது உடல் திறனை 5 முதல் 10 சதவீதம் வரை மேம்படுத்திக் கொண்டது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இளமையில் உடற்பயிற்சி செய்யத் தவறியவர்கள் கூட இப்போது தொடங்கலாம்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள்
ஆய்வின் முதன்மை ஆசிரியரான மரியா வெஸ்டர்ஸ்டால் கூறுகையில், "உடல் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு இது மிகத் தாமதமான நேரம் என்று எதுவும் இல்லை. உடற்பயிற்சியால் உடல் வலிமை குறைவதைத் தடுக்க முடியாது என்றாலும், அந்தச் சரிவின் வேகத்தை நிச்சயம் குறைக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து சுறுசுறுப்பாக இருப்பது, தசை வலிமைக்கான பயிற்சிகளை மேற்கொள்வது போன்றவை 35 வயதிற்குப் பிறகு ஏற்படும் உடல் சோர்வைத் தவிர்க்க உதவும்.