LOADING...
தந்தையர் தினம் 2026: ஆண்களின் மலட்டுத்தன்மை 40 சதவீதமாக அதிகரிப்பு! மருத்துவர்கள் எச்சரிக்கும் அதிர்ச்சி பின்னணி
ஆண்களின் மலட்டுத்தன்மை 40 சதவீதமாக அதிகரிப்பு

தந்தையர் தினம் 2026: ஆண்களின் மலட்டுத்தன்மை 40 சதவீதமாக அதிகரிப்பு! மருத்துவர்கள் எச்சரிக்கும் அதிர்ச்சி பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 21, 2026
04:20 pm

செய்தி முன்னோட்டம்

குழந்தை வளர்ப்பு, பொறுப்பு மற்றும் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் கொண்டாடும் நாளாக இந்த தந்தையர் தினம் பார்க்கப்படுகிறது. இந்த நாளில், தம்பதியரிடையே அதிகரித்து வரும் குழந்தை இன்மை பிரச்சனையில் ஆண்களின் பங்களிப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனப் மகப்பேறு மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். பொதுவாகக் குழந்தை இன்மை என்பது பெண்களின் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையாக மட்டுமே பார்க்கப்பட்ட பிம்பத்தை தற்போதைய மருத்துவத் தரவுகள் முற்றிலும் மாற்றியமைத்துள்ளன.

ஆண்கள்

40 சதவீத குழந்தை இன்மைக்கு ஆண்களே காரணம்

டெல்லி-என்சிஆர் பிராந்தியத்தில் உள்ள முன்னணி கருத்தரிப்பு மையங்கள் நடத்திய அண்மைய ஆய்வில், ஆண் மலட்டுத்தன்மை மிக அதிவேகமாக அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் பரிசோதிக்கப்பட்ட 1,000 தம்பதிகளில் சுமார் 400 பேருக்கு ஆண்களின் மலட்டுத்தன்மை காரணியே முதன்மைக் காரணமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், குழந்தை இன்மை பிரச்சனைகளில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் ஆண்களாலேயே ஏற்படுவது தெளிவாகத் தெரிகிறது.

இந்தியா

தெற்காசியாவிலேயே இந்தியாவில் தான் மிக அதிக பாதிப்பு

கடந்த 2021 ஆம் ஆண்டு வரையிலான உலகளாவிய நோய் பாதிப்பு தரவுகளின்படி, தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் ஆண்களின் மலட்டுத்தன்மை பாதிப்பு மிகக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 1990 முதல் 2021 வரையான காலகட்டத்தில், இந்தியாவில் ஆண்களுக்கான மலட்டுத்தன்மை பாதிப்பு விகிதம் 58.82 சதவீதம் என்ற அளவில் உயர்வை சந்தித்துள்ளது. இந்த அபாயகரமான வளர்ச்சியானது, ஆண்களின் வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆரம்பக்கட்ட விழிப்புணர்வின் அவசியத்தை உணர்த்துகிறது.

Advertisement

வாழ்வியல் முறைகள்

ஆண் மலட்டுத்தன்மையை அதிகரிக்கும் மோசமான வாழ்வியல் முறைகள்

அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் உடலுழைப்பற்ற வாழ்வியல் முறை விந்தணுக்களின் தரத்தை நேரடியாகப் பாதிக்கின்றன. மேலும், உடல் பருமன், சத்துக்களற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், புகைபிடித்தல் மற்றும் அதிக மதுப்பழக்கம் ஆகியவற்றால் ஆண்களின் இனப்பெருக்கத் திறன் பெருமளவில் பலவீனமடைகிறது. இவற்றுடன் போதிய தூக்கமின்மை மற்றும் சுற்றுச்சூழல் நச்சுக்களின் தாக்கமும் விந்தணு உற்பத்தியைக் கடுமையாகப் பாதிக்கின்றன என்று மகப்பேறு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Advertisement

மருத்துவக் குறைபாடுகள்

ஸ்டெராய்டு பயன்பாடும் பிற மருத்துவக் குறைபாடுகளும்

தசை வளர்ச்சிக்காகப் பல இளைஞர்கள் உடற்பயிற்சிக் கூடங்களில் தவறாகப் பயன்படுத்தும் அனபோலிக் ஸ்டெராய்டுகள் விந்தணு உற்பத்தியை முற்றிலும் முடக்குகின்றன. இது தவிர, சில குறிப்பிட்ட மரபணு குறைபாடுகள், சிறுவயதில் ஏற்பட்ட உடல் தொற்றுகள் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை ஆகியவையும் ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கியக் காரணமாக அமைகின்றன. மேலும், கடந்த காலங்களில் செய்யப்பட்ட சில அறுவை சிகிச்சைகள் மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சைகளும் இந்த பாதிப்பிற்கு வழிவகுக்கின்றன.

விறைப்புத் தன்மை குறைபாடு 

விறைப்புத்தன்மை குறைபாடும் அதன் மறைமுக ஆபத்துகளும்

கருத்தரிப்பு ஆலோசனைகளுக்கு வரும் 25 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களில் பலருக்கு விறைப்புத்தன்மை குறைபாடு இருப்பதைக் காண முடிகிறது. இதனை வெறும் பாலியல் பிரச்சனையாக மட்டுமே பார்க்கக் கூடாது என சிறுநீரக மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில், இது உடலில் உள்ள இரத்த நாள பாதிப்பு, ஹார்மோன் குறைபாடு, வளர்சிதை மாற்றப் பிரச்சனைகள் அல்லது மனநல பாதிப்புகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

ஆரோக்கிய சபதம்

தந்தையர் தினத்தில் எடுக்க வேண்டிய ஆரோக்கிய சபதம்

இந்த தந்தையர் தினம் என்பது வெறும் கொண்டாட்டத்திற்கான நாள் மட்டுமல்லாமல், தங்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாளாகவும் ஆண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆண் மலட்டுத்தன்மைக்கான பெரும்பாலான காரணங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முறையான மருத்துவ சிகிச்சை மற்றும் எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும். எனவே, தகுந்த நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது தங்களின் பெற்றோராகும் கனவை நனவாக்க பெரிதும் உதவும்.

Advertisement