உண்மை தகவல் சரிபார்ப்பு: கோவிட் தடுப்பூசியும், அதை சுற்றியுள்ள பக்க விளைவுகள் பற்றிய வதந்தியும்
கோவிட் தடுப்பூசியினால், உடம்பில் பல பக்க விளைவுகள் வருவதை, மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒத்துக்கொள்வதாக வந்த செய்திகள் பொய்யென மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆகியவை கோவிட்-19 தடுப்பூசிகளின் பல பக்க விளைவுகளை ஒப்புக்கொண்டதாக சமீபத்தில் இணையத்தில் செய்திகள் உலா வந்தன. அதை மத்திய சுகாதார துறை அமைச்சகம் மறுத்துள்ளது. சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கோவிட்-19 நோயின் வீரியத்தைக் கட்டுப்படுத்தவும், அதனால் ஏற்படும் இறப்புகளை தடுக்கவும், இந்த தடுப்பூசி உதவுவதாக, சர்வதேச ஆராய்ச்சி அறிக்கைகள் காட்டுகின்றன. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய அரசை நோக்கி முன்வைக்கப்பட்ட கேள்விக்கான பதிலாக, மத்திய அரசு இதை தெரிவித்துள்ளது.
கேள்விக்குள்ளான ICMR பட்டியல்
தற்போது வரை, 22.46 கோடி மக்கள் முதல் டோஸ் ஊசியும், 95.14 கோடி மக்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் எடுத்துக்கொண்டுள்ளதாகவும், இதுவரை நிர்வகிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசி அளவுகளின் மொத்த எண்ணிக்கை 220.17 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், CDC, WHO மற்றும் சுகாதார அமைச்சகம் ஆகியவற்றில் உள்ள தகவல்கள் அடிப்படையில், உலகில் உள்ள கோவிட்-19 தடுப்பூசியின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளை ICMR பட்டியலிட்டுள்ளது. இது பற்றி கருத்து தெரிவித்த அமைச்சகம், அது ICMR-இன் ஆராய்ச்சி முடிவுகள் அல்ல என்றும், அவை தொகுக்கப்பட்ட பட்டியல் மட்டுமே எனவும் குறிப்பிடுகிறது. கோவிட்-19 தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளில் ஒரு சிறிய சதவீதத்தினர் மட்டுமே, சில முன்கூட்டிய சூழ்நிலைகளைப் பொறுத்து, கடுமையான பாதிப்புக்கு ஆளாக நேரிடுமென வலியுறுத்தியுள்ளது.