
ஸ்கிசோஃப்ரினியா எனும் மனநோய் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவை
செய்தி முன்னோட்டம்
ஸ்கிசோஃப்ரினியா என்பது ஒரு மனநலக் கோளாறு ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரணமான விஷயத்தைக் கூட, மிகவும் அசாதாரணமான முறையில் புரிந்துகொள்வார்கள். அதாவது, மாயத்தோற்றங்கள், பிரமைகள் மற்றும் ஒழுங்கற்ற சிந்தனை போன்றவற்றைக் கொண்டிருப்பார்கள்.
இத்தகைய மனநோய் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை:
ஸ்கிசோஃப்ரினியா, ஒரு நாள்பட்ட மனநல பாதிப்பு. இது ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி அல்ல. இந்த பாதிப்பு இருபாலருக்கும் உண்டென்றாலும், ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள், பெரும்பாலும் நீரிழிவு அல்லது இதயம் தொடர்பான நோய்களால், இளம் வயதிலேயே இறக்க வாய்ப்புள்ளது.
இதன் மூல காரணம் இன்னும் தெளிவாக கண்டுபிடிக்கப்படவில்லை.
எனினும், மரபு வழியிலும், மூளை நரம்புகளில் ஏற்பட்ட பாதிப்புகளாலும், இந்த நோய் வரலாம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
மன நோய்
ஸ்கிசோஃப்ரினியா நோயாளிகள் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்பது கட்டுக்கதை
இந்த மனநோயால் பாதிக்கப்படுபவர்கள், பொதுவாக மனப்பிரமையால் முதலில் பாதிக்கப்படுவார்கள்.
திடீரென்று, இல்லாத காட்சிகளை காண்பதும், குரல்களை கேட்பதும் முதற்கட்ட அறிகுறி.
ஒழுங்கற்ற சிந்தனை, அசாதாரண நடத்தைகள், தூக்கமின்மையும் நாள்பட ஏற்படும்.
இவ்வகை நோயாளிகள், வன்முறையில் ஈடுபடுவார்கள் என்பது கட்டுக்கதை. உண்மையில், அவர்கள், தங்களை தாங்களே வருத்திக்கொண்டு, இறுதியில் தற்கொலை வரை செல்வார்கள் என்பது தான் உண்மை.
சரியான நேரத்தில் தரப்படும் மருத்துவ கவனிப்பு, இவர்களை இந்த மனநோயின் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின், அன்பும், ஆதரவும், அவர்களின் மன உறுதியை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை நீக்கவும், அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கவும் உதவும்.