சோலோ-ட்ரிப் செல்பவர்கள் கவனிக்க வேண்டிய 7 அத்தியாவசிய குறிப்புகள் இதோ!
பயணம் செய்வது எவ்வளவு சுவாரஸ்யமான விஷயமோ, அந்தளவிற்கு ஆபத்தும் அதிலுள்ளது. குறிப்பாக ஒருவர் தனியாக பயணிக்கையில், அதற்கான முன்னேற்பாடுகள், முக்கியமாக தங்கும் இடத்தினை தீர்மானிப்பது என்பதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். நாம் தங்குமிடத்தில் பாதுகாப்பு, அவசரகாலநிலை உள்ளிட்ட விஷயங்கள் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியமாகும். அதற்கான சில குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது! நீங்கள் தங்குவதற்காக தேர்ந்தெடுக்கும் ஹோட்டலினை ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு முன்னர், அதன் இருப்பிடம், பாதுகாப்பு, வசதிகள் குறித்து ஆராய்ந்துகொள்ளுங்கள். மதிப்புரைகளை(feedback) படிப்பது, புகைப்படங்களை பார்ப்பது, மதிப்பீடுகளை(ratings) சரிபார்ப்பது உள்ளிட்டவை கட்டாயமாகும். எப்போதும் நீங்கள் தங்கும் ஹோட்டலில் தரைத்தளத்தில் அறையினை பதிவுச்செய்யாமல், மேல் தளத்தில் இருக்கும் அறையில் தங்குங்கள். அது திருடர்கள் போன்ற தொல்லைகளில் இருந்து தள்ளியிருக்க உதவும்.
ஹோட்டல் அறை எண் விவரங்களை ரகசியமாக வைத்துக்கொள்வது நல்லது
தனியே பயணிக்கையில் ஒரேயொரு பை எடுத்துச்செல்வது நல்லது. ஏனெனில், தனியே செல்கையில், பொருட்களை பாதுகாப்பதும், அதிக எடைகொண்ட பைகளை சுமப்பதும் கடினம். அதேப்போல் நீங்கள் எடுத்துச்செல்லும் பணம், நகைகள், லேப்டாப்,போன்ற பொருட்களை, அனாவசியமான இடங்களில் வைக்காமல், பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக நீங்கள் தனியே பூட்டுப்போட்டு சாவியை கையில் வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. அடுத்ததாக, நீங்கள் தங்கியுள்ள ஹோட்டல் அறையின் எண்ணினை ரகசியமாக வைத்துக்கொள்வது உங்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு உகந்ததாகும். கிரெடிட்கார்டு முறைகேட்டினை தவிர்க்க, அதனை யாரும் பார்க்காதவாறும், புகைப்படம் எடுக்காதவாறும் பயன்படுத்துங்கள். பணத்தினை எப்போதும் உங்கள் ஹான்ட்பேக்கில் வைத்திருப்பது நல்லது. ஒருவேளை அறையிலேயே வைக்கவேண்டுமெனில், திண்பண்டங்கள் இருந்த காலிப்பையில் போட்டு வையுங்கள். இவ்வாறு செய்தால், பணம் திருடு போகும் அபாயம் குறைவு.