2 நிமிட நூடுல்ஸ் கேள்விப்பட்டு இருப்பீர்கள், ஆனால் பொறித்த நூடுல்ஸ் தெரியுமா?
ஃபாஸ்ட் பூட் உணவு வகைகளில் முதலிடம் பிடிப்பது நூடுல்ஸ் வகைகள்தான். ஆனால் நீங்கள் நினைப்பது போல நூடுல்ஸ் உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவு அன்று. அதை முறைப்படி தயார் செய்து உண்டால், அதிலும் சத்துகள் உள்ளது. நூடுல்ஸ் பிறப்பிடமான கிழக்காசிய நாடுகளில் 20க்கும் மேற்பட்ட நூடுல்ஸ் வகையறாக்கள் உள்ளது. கிமு 3ஆம் நூற்றாண்டு போல, கிழக்கு ஹான் காலத்திலே மலிவாக கிடைக்கக்கூடிய கோதுமையை மூலப்பொருளாகக்கொண்டு இந்த உணவை உருவாக்கியுள்ளனர். தற்போது பிரபலமாக இருக்கும் சில நூடுல்ஸ் வகைகளின் பட்டியல் இதோ: மி சியான்: தென்மேற்கு சீனாவில் பிரபலமாக இருக்கும் இந்த நூடுல்ஸ், அரிசி மற்றும் தண்ணீரின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. யுன்னான் வகை அரிசி நூடுல்ஸ் பார்ப்பதற்கு வட்டமாக, ஸ்பாகெட்டி போன்ற தோற்றத்தில் இருக்கும்.
நூடுல்ஸ் வகைகள்
மி ஃபென்: சேமியா போல மெல்லிதாக, உடையும் தன்மையுடன் இருக்கும். ஹாங்காங்கில், இது மீன் அல்லது மாட்டிறைச்சிகளுடன் குழம்பில் வேக வைக்கப்படுகிறது.பிலிப்பைன்ஸில், காய்கறிகள் மற்றும் இறைச்சி ஆகியவை சேர்த்து 'பஞ்சிட் பிஹோன்' என அழைக்கப்படுகிறது. சௌ மெய்ன்: சீனாவின் குவாங்டாங்கில் இருந்து உருவானது இந்த 'பொறித்த நூடுல்ஸ்'. லா மியான்: கோதுமை மாவு, உப்பு, தண்ணீர் கலந்து, கையால் இழுத்து, அடித்து, பரோட்டா மாவு போல தயார் செய்யப்படுகிறது இந்த நூடுல்ஸ். மாவை நீண்ட பட்டைகளாக இழுத்து இழுத்து உருவாக்கப்படுகிறது. ஃபென் சி: இந்த நூடுல்ஸ், ஒல்லியாக கண்ணாடி போல இருக்கும். இதற்கு காரணம் இந்த நூடுல்ஸ், கோதுமை மாவில் அல்லாமல் வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவு சத்தை வைத்து உருவாக்கப்படுகிறது.