தீபாவளி அன்று எண்ணெய் குளியல் செய்வது எப்படி? தெரிந்து கொள்வோம்
வரும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி அன்று, விடியற்காலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கம். ஆனால் கால மாற்றத்தால், எண்ணெய் குளிக்கும் முறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சிலர் எண்ணெய் தேய்த்து குளிக்கும் மரபை கூட மறந்து விட்டனர். எண்ணெய் குளியல் ஆன்மீகம் சார்ந்து செய்வது அல்ல. அதற்கென சில அறிவியல் காரணங்களும் உண்டு. எண்ணெய் காய்ச்சுவது எப்படி என்றும், அதன் பலன்கள் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
எண்ணெய் காய்ச்சி, தேய்க்கும் முறை
எண்ணெய் காய்ச்சும் முறை: ஒரு கடாயில் நல்லெண்ணை சிறிது சேர்த்து மிதமான தீயில் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், அதில் சிறிது சீரகம், தோல் சீவி இடித்து வைத்த இஞ்சி மற்றும் 2 பல் பூண்டு தட்டி போடவும். அவை பொன்னிறமாகும் வரை மிதமான சூட்டில் அடுப்பை வைக்கவும். சூடு ஆறிய பிறகு, எண்ணெய் வடித்து, தலையில் முதலில் தேய்க்க வேண்டும். பின்னர், உடலின் மற்ற இடங்களுக்கு காய்ச்சாத நல்லெண்ணையை தேய்த்து கொள்ளலாம். எண்ணெய் தேய்ப்பதற்கு வீட்டின் கொல்லைப்புறத்தில் அமர வேண்டும். எண்ணெய் ஒரு கிண்ணத்திலும், சீயக்காய் பொடியை மற்றொரு கிண்ணத்திலும் வைத்து வணங்கி, உள்ளங்கையில் எண்ணையை எடுத்து, உச்சந்தலையில் தேய்க்கவும். அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு, வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.
எண்ணெய் தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள்
தீபாவளி அன்று பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் தெய்வங்கள் வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. எண்ணெய் தேய்த்து குளிப்பது, கங்கை நீரில் குளிப்பதை போன்றதாகக் கருதப்படுகிறது, இது பாவங்களை நீக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது. எண்ணெய் குளியல் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறவும் நமது அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்தவும் உதவுகிறது. இது சருமத்தின் தன்மை மற்றும் நிறத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் நரம்புகளுக்கு சிறந்தது. இது மனச்சோர்வு, ஒற்றைத் தலைவலி, வயிற்றுக் கோளாறு, நீரிழிவு, மஞ்சள் காமாலை, புற்றுநோய் மற்றும் பிற வைரஸ் நோய்கள் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது. கண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும், ஏனெனில் இது பார்வையை அதிகரிக்கிறது மற்றும் தூசி துகள்களை நீக்குகிறது. மன மற்றும் உடல் அழுத்தத்தை குறைக்கிறது.