சமையலறையில் கரப்பான் பூச்சி, எலி எச்சம்: ஹைதராபாத்தில் 7 KFC கிளைகளின் உரிமம் ரத்து
செய்தி முன்னோட்டம்
தெலுங்கானா உணவு மற்றும் அத்தியாவசிய மருந்துகள் தர நிர்ணய ஆணையம் (TG-SAFE) நவம்பர் 12 அன்று ஹைதராபாத்தின் முக்கியப் பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தியது. உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அடங்கிய 13 குழுக்கள் 26 துரித உணவகங்களில் சோதனை மேற்கொண்டன. இதில் சுகாதார விதிகளை கடுமையாக மீறிய 7 கே.எஃப்.சி (KFC) கிளைகளின் FSSAI உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அவற்றின் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கலப்படம்
சமையலறையில் கரப்பான் பூச்சி, எலி எச்சம் மற்றும் சமையல் எண்ணெயில் ரசாயனக் கலப்படம்
ஆய்வின் போது பல உணவகங்களின் சமையலறைகள் மற்றும் சேமிப்பு அறைகளில் கரப்பான் பூச்சிகள், ஈக்கள் மற்றும் எலியின் எச்சங்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
மேலும் சுவர்களில் பூஞ்சை வளர்ச்சி, பிசுபிசுப்பான பாத்திரங்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது.
குறிப்பாக சில கிளைகளில் பழைய சமையல் எண்ணெயை வடிகட்டி மீண்டும் பயன்படுத்துவதற்காக அனுமதியற்ற 'செயற்கை மெக்னீசியம் சிலிக்கேட்' ரசாயனம் பயன்படுத்தப்பட்டதை கண்டறிந்த அதிகாரிகள், சுமார் 52 கிலோ ரசாயனத்தைப் பறிமுதல் செய்தனர்.
6 கிளைகளுக்கு நோட்டீஸ்
மூடப்பட்ட 7 KFC கிளைகளின் பட்டியல் மற்றும் மேலும் 6 கிளைகளுக்கு நோட்டீஸ்
உரிமம் ரத்து செய்யப்பட்ட 7 கே.எஃப்.சி கிளைகள் மதீனாகுடா-மியாபூர், செகந்திராபாத் சிந்தி காலனி, சார்மினார் பஞ்ச் மொஹல்லா, மூசரம்பாக், பஞ்சாரா ஹில்ஸ், ஹைடெக் சிட்டி சில்ப கலா வேதிகா மற்றும் மாதப்பூர் இன்ஆர்பிட் மால் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
இவை தவிர கொண்டாப்பூர், கர்கானா, ஹிமாயத்நகர் மற்றும் ஷேக்பேட் கிளைகளுக்கு சீர்திருத்த நோட்டீஸும், நிஜாம்பேட்டை மற்றும் கச்சிபௌலி கிளைகளுக்குக் கடும் விதிமீறல்களுக்காக விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளன.
அழிப்பு
மாதப்பூர் பேக்கிங்கோ கடையில் காலாவதியான 60 கிலோ கேக் அடித்தளங்கள் அழிப்பு
இதேபோல் மாதப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல பேக்கரி நிறுவனமான பேக்கிங்கோ கிளையிலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அங்கு நவம்பர் 10-ஆம் தேதியுடன் காலாவதியான சுமார் 60 கிலோ கேக் அடித்தளங்களைப் (Cake Bases) பயன்படுத்தி, நவம்பர் 12 வரை காலாவதி தேதி கொண்ட புதிய கேக்குகளாகத் தயாரித்து விற்பனை செய்ய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து 60 கிலோ கேக் அடித்தளங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து உடனடியாக அழித்தனர்.