தீபாவளிக்குப் பின் சென்னை புகை மண்டலம்; 1,463-ஐ தொட்டு அபாய நிலையை எட்டிய AQI
செய்தி முன்னோட்டம்
தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாகக் கொண்டாடியதைத் தொடர்ந்து, சென்னை மாநகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் முழுவதும் அடர்ந்த புகை மண்டலமாக மாறின. வடபழனி, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அசோக் நகர், கிண்டி, ஆலந்தூர் மற்றும் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் புகை மூட்டம் அடர்த்தியாகக் சூழ்ந்ததால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். கூடுதல் விபரங்கள் இங்கே:-
காற்றின் தரக் குறியீடு
1,463-ஐ தொட்டு அபாய நிலையை எட்டிய சென்னை காற்றின் தரக் குறியீடு
சென்னையில் காற்றின் தரக் குறியீடு (AQI) இதுவரை இல்லாத அளவாக இரவில் 1,463-ஐ தொட்டு 'மிகவும் அபாயம்' என்ற ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.
நகரின் குறிப்பிட்ட மண்டலங்களில் அதிகபட்சமாக சைதாப்பேட்டைப் பகுதியில் காற்றின் தரக் குறியீடு 302-ஆகப் பதிவாகியுள்ளது.
கிழக்குத் தாம்பரம், மேற்குத் தாம்பரம், சேலையூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் அடர்ந்த நச்சுப் புகை சூழ்ந்ததால், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் மூச்சுத் திணறல், இருமல் மற்றும் கண் எரிச்சல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.
60 சிகரெட் குடிப்பதற்குச் சமம்
பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் எச்சரிக்கை
சென்னையின் இந்த மோசமான காற்று மாசு குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சமூக செயற்பாட்டாளருமான சுந்தர்ராஜன் தீவிர வேதனையையும் எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்குப் பிறகு சென்னையில் நிலவும் காற்று மாசின் அளவு ஒரே நாளில் 60 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமானது என ஒப்பீடு செய்து சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு பட்டாசு விற்பனைக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிபுணர்கள் அறிவுறுத்தல்
சுவாசம் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க நிபுணர்கள் அறிவுறுத்தல்
சென்னையில் வளிமண்டலக் காற்று மாசின் செறிவு மிக அதிகமாக இருப்பதால், அடுத்த சில நாட்களுக்குப் பொதுமக்கள் குறிப்பாக சுவாசப் பிரச்சனை மற்றும் ஆஸ்துமா உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது கட்டாயம் முக கவசங்களை அணிய வேண்டும் என சுகாதாரத்துறை வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும், குழந்தைகள் வெளிக்காற்றை நேரடியாகச் சுவாசிப்பைக் கட்டுப்படுத்துமாறும் சூழலியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, சென்னையில் தற்போதைய நிலவரப்படி காற்றின் தரக் குறியீடு 200-க்கும் சற்று கீழே குறைந்துள்ளது.