இரவு தூக்கம் கெட்டுப்போனால், மதியம் தூங்கும் பழக்கம் உண்டா?
பொதுவாக இரவில் சரியாக தூங்க முடியவில்லை என்றால், பகல் நேரத்தில், குறிப்பாக மதியம் நல்ல தூக்கம் தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று கூறுவார்கள். ஆனால், மருத்துவர்கள் அதை தவறு என எச்சரிக்கிறார்கள். ஆமாம், மதியம் போடும் குட்டி தூக்கம் 30 நிமிடங்களுக்கு மேலே நீடித்தால், இதய துடிப்பு சீரற்றதாகிவிடும் எனவும் எச்சரிக்கிறார்கள். நடத்தப்பட்ட ஆய்வின்படி, அதிக பகல்நேர தூக்கம், 'ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்' என்ற இதய கோளாறை உண்டாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, இதயம் மிகவும் மெதுவாக அல்லது மிக வேகமாக அல்லது ஒழுங்கற்ற முறையில் துடிக்கும் போது, அரித்மியா எனப்படும் இதயதுடிப்பு கோளாறின் அடுத்தகட்டம் தான் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன்.
ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பது என்ன?
ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் பொதுவாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றாலும், இந்த நிலையில் உள்ளவர்களுக்கு, மற்றவர்களை விட, பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் என்று மருத்துவ உலகம் கூறுகிறது. இந்த ஆராய்ச்சிக்கு, உட்படுத்தப்பட்டவர்கள், 15 நிமிடங்களுக்கும் குறைவாக தூங்குபவர்கள், 15 முதல் 30 நிமிடங்கள் தூங்குபவர்கள் மற்றும் 30 நிமிடங்களுக்கு மேல் தூங்குபவர்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டனர். ஆராய்ச்சியின் இறுதியில், "குறுகிய பகல்நேர தூக்கத்தை ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் உறங்குபவர்களுக்கு, ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் உருவாகும் ஆபத்து கிட்டத்தட்ட இரட்டிப்பாகும்" என கண்டுபிடித்தனர்.