CAR-T செல் சிகிச்சையைப் பயன்படுத்தி புற்றுநோயிலிருந்து ஒருவர் முழுதாக குணம்!
இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளரால் சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு புற்றுநோய் சிகிச்சையான இந்தியாவின் CAR-T செல் சிகிச்சையைப் பயன்படுத்தி, முதல் புற்றுநோயாளி குணப்படுத்தப்பட்டுள்ளார். இது ஒரு உள்நாட்டு புற்றுநோய் சிகிச்சையாகும். இது சமீபத்தில் மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) வணிக பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள சிகிச்சையானது புற்றுநோயை எதிர்த்துப் போராட நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மரபணு ரீதியாக மறுசீரமைப்பதாக அறியப்படுகிறது. இந்த சிகிச்சையை எடுத்துக்கொண்ட நோயாளி, டாக்டர் (கர்னல்) வி.கே. குப்தா. இவர் டெல்லியைச் சேர்ந்த இரைப்பைக் குடலியல் நிபுணர் ஆவர். இந்த சிகிச்சைக்காக வெறும் 42 லட்ச ரூபாய் செலவழித்ததாக கூறப்படுகிறது. இதுவே அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டால் ரூ. 4 கோடி செலவாகி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
CAR-T செல் சிகிச்சை என்றால் என்ன?
CAR-T செல் சிகிச்சை என்பது ஒரு வகை நோயெதிர்ப்பு சிகிச்சையாகும். இது புற்றுநோய் செல்களைத் தாக்குவதற்கு, நோயாளியின் T செல்களை மரபணு ரீதியாகப் மாற்றியமைக்கிறது. T செல்கள் என்பது ஒரு வகை வெள்ளை இரத்த அணுக்கள் ஆகும். அவை உடலில் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன. CAR-T செல் சிகிச்சையில், T செல்கள் நோயாளியிடமிருந்து எடுக்கப்பட்டு, சிமெரிக் ஆன்டிஜென் ஏற்பி (CAR) எனப்படும் சிறப்பு புரதத்தை வெளிப்படுத்த, ஆய்வகத்தில் மாற்றியமைக்கப்படுகின்றன. இந்த CAR புரதம் சேர்க்கப்பட்ட T செல்கள் நோயாளிக்கு மீண்டும் செலுத்தப்படுகிறது. அவை புற்றுநோய் செல்களை அடையாளம் கண்டு எதிர்த்துப் போராட உதவுகிறது. இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை இப்போது கிடைக்கிறது.