சிறந்த சாலையோர இனிப்பு வகைகள் பட்டியலில் இடம்பெற்ற மூன்று இந்திய இனிப்புகள்
இனிப்புகளை விரும்பாதவர்கள் இந்த உலகில் இருக்க முடியாது. அனைவருக்கும் ஏதாவது ஒரு இனிப்பு வகை கண்டிப்பாகப் பிடித்திருக்கும். உலகின் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மூலையிலும் பல்வேறு வகையான இனிப்புகள் தயார் செய்யப்படுகின்றன. உலகம் முழுவதும் சாலையோரக் கடைகளில் தயாரிக்கப்படும் சிறந்த 50 இனிப்புகளின் பெயர்களைப் பட்டியலிட்டிருக்கிறது 'டேஸ்ட் அட்லஸ்' என்ற உணவுகள் குறித்த தகவல்களை வழங்கும் தளம். இதற்கு முன்னர், உலகின் பாரம்பரிய உணவுகள், உலகின் சிறந்த உணவகங்கள் மற்றும் உலகின் சிறந்த உணவுப் பொருட்கள் என உணவு சார்ந்த பல்வேறு பட்டியல்களை வெளியிட்டிருக்கிறது. தற்போது அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் 50 சிறந்த சாலையோர இனிப்புகள் பட்டியலில், இந்தியாவைச் சேர்ந்த மூன்று இனிப்பு வகைகளின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன.
பட்டியலில் இடம்பெற்ற இந்திய இனிப்பு வகைகள்:
டேஸ்ட் அட்லஸ் தளத்தின் சிறந்த சாலையோர இனிப்பு வகைகளின் பட்டியலில், 14வது இடத்தைப் பிடித்திருக்கிறது 'மைசூர் பாகு'. 1935-ல் மைசூர் அரண்மனையில் மடப்பா என்ற புகழ்பெற்ற சமையலர் ஒருவரால் உருவாக்கப்பட்டது இந்த மைசூர் பாகு, என அது குறித்து தங்கள் தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில் 18-வது இடத்தைப் பிடித்திருக்கிறது 'குல்ஃபி'. இளஞ்சூட்டில் பாலை நீண்ட நேரம் கொதிக்க வைப்பதன் மூலம் குல்ஃபி உருவாக்கப்படுவதாக தெரிவித்திருக்கும் டேஸ்ட் அட்லஸ், இதனை இந்திய ஐஸ்கிரீம் எனவும் குறிப்பிட்டிருக்கிறது. மூன்றாவது இந்திய இனிப்பாக இந்தப் பட்டியலில் 32-வது இடத்தைப் பிடித்திருக்கிறது 'குல்ஃபி ஃபலூடா'. வடஇந்தியாவில் ஃபலூடா நூடுல்சுடன் சேர்த்துப் கொடுக்கப்படும் குல்ஃபி பலூடாவானது, பொதுவாக வீடுகளில் அதிகம் செய்யப்படும் இனிப்பு எனக் குறிப்பிட்டிருக்கிறது டேஸ்ட் அட்லஸ்.