100 கிராம் பம்ப்கின் விதைகள் - மறைந்திருக்கும் நன்மைகள்
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பலதரப்பட்ட காய்கறிகள், பழங்கள் விளைகிறது. ஆனால் அதன் முழு நன்மைகள் குறித்து அறிந்து அதனை நமது உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் நம்முள் பலருக்கு இல்லை என்றே கூறலாம். பணம் அதிகம் கொடுத்து வாங்கும் பொருட்களில் தான் சத்துக்கள் நிறைந்துள்ளதாக இத்தலைமுறை மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது ஏற்கத்தக்கதல்ல. இதற்கு எடுத்துக்காட்டாக பம்ப்கின் என்னும் பூசணிக்காயை எடுத்துக்கொள்ளலாம். அதன் பெயரை கேட்டாலே பலருக்கும் நினைவிற்கு வருவது அதன் உருளையான வடிவமைப்பும், திருஷ்டி எடுப்பதும் தான். நீர்சத்து நிறைந்து காணப்படும் இந்த பூசணிக்காய் மட்டுமல்ல அதனுள் இருக்கும் விதைகளும் மிக மருத்துவக்குணம் வாய்ந்தவை. அது குறித்த விவரங்களை தான் நாம் இந்த செய்திக்குறிப்பில் காணவுள்ளோம்.
600 கலோரிகள் நிறையப்பெற்ற 100 கிராம் பூசணி விதைகள்
ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ள இப்பூசணி விதைகளில் துத்தநாகம், மெக்னீஷியம், இரும்புச்சத்து, உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. 100 கிராம் பூசணி விதைகளில் 600 கலோரிகள், 30 கிராம் புரொட்டீன்ஸ், 49 கிராம் கொழுப்பு சத்து, 6.6 கிராம் நார்ச்சத்து உள்ளிட்டவைகள் நிறைந்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இதில் நிறைந்திருக்கும் கொழுப்பு சத்து நமது உடலுக்கு நற்பயன்களை அளிக்கக்கூடியது தானாம். மேலும் இதில் வைட்டமின்கள் பி1, பி2, பி3, பி5, பி9, வைட்டமின்-சி, வைட்டமின்-கே, வைட்டமின்-ஈ, கால்சியம், போஸ்பரஸ், மாங்கனீஸ், பொட்டாசியம், சிங்க், சோடியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. பல ஊட்டச்சத்து நிறைந்துள்ள இந்த பூசணி விதையினை நீரிழிவு நோயாளிகள் காலை உணவாக உண்ணலாம். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை சீர்படுத்தும்.
பூசணி விதைகளில் அமைந்துள்ள மருத்துவ நன்மைகள்
அதனைத்தொடர்ந்து, துத்தநாகம் நிறைந்துள்ள இந்த விதைகள் மூளைக்கு மிக நன்மையினை அளிப்பதன் மூலம் மன ஆரோக்கியம் மேம்படும் என்றும் கூறப்படுகிறது. இது உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்குமே பலத்தை கொடுக்க வல்லது. நார்ச்சத்து, ஆன்ட்டி-ஆக்சிடெண்ட்ஸ் நிறைந்துள்ள இந்த விதையினை உட்கொண்டால் இதயத்துக்கு நல்லதாம். இதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை அழித்து நல்ல கொழுப்பை உற்பத்தி செய்ய உதவுகிறது. பூசணி விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமுள்ளதால் அது கீழ்வாத வலியினை போக்க வல்லது. இதனிடையே, இந்த விதைகளை நாம் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் முட்டி வலி நீங்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேபோல் பூசணிவிதையின் எண்ணெய் கொண்டு முட்டிக்கு மசாஜும் செய்யலாம்.
புற்றுநோய் பாதிப்பினை தடுக்கும் சக்தி கொண்ட பூசணி விதைகள்
ஒரு கையளவு பூசணி விதைகளை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் இதிலுள்ள வீரியம் மிகுந்த ஆன்டி ஆக்சிடெண்ட்டுக்கள் மூலம் மார்பகம், பெருங்குடல், இரைப்பை போன்ற புற்றுநோய்கள் வருவதற்கான அபாயங்கள் குறையும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படும் ப்ரோஸ்டேட் புற்றுநோயினை தடுக்கும் சக்தி இந்த விதைகளுக்கு உள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை. இந்த விதைள் மாதவிடாய் பிரச்சனைகள், கல்லீரல் பாதுகாப்பு, ஆழ்ந்த தூக்கம் போன்றவைகளுக்கும் தீர்வளிக்கும். இந்திய நாட்டில் இந்த பூசணி விதைகள் உணவில் சேர்த்துக்கொள்வதை விட அதிகளவு மருந்துகளை தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது.
அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் உணடாகும் உபாதைகள்?
ஆனால் ஐரோப்பியா, அமெரிக்கா, ஆப்பரிக்கா போன்ற உலக நாடுகளில் பூசணிக்காயினை அதிகளவில் பயிரிட்டு வளர்த்து அதனை தங்கள் உணவுகளில் அதிகம் சேர்த்துக்கொள்கின்றனர் என்பது வியக்கத்தக்க உண்மையாகும். இதற்கு பெயர் தான் உணவே மருந்து. பச்சை, சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட வகைகளை கொண்ட பூசணிக்காய்கள் அண்டார்டிகா தவிர உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. இத்தகைய மருத்துவகுணங்கள் கொண்ட இந்த பூசணிக்காய் விதைகளை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ளக்கூடாது என்றும் மருத்துவத்துறை எச்சரிக்கை அளித்துள்ளது. அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் அடிவயிற்றில் பிடிப்பு, வயிற்றுவலி, அஜீரண கோளாறுகள் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.