அஜர்பைஜான் எப்படி பலருக்கும் விருப்பமான சுற்றுலாதலமாக மாறியது?
சமீபகாலமாக பலரும் அஜர்பைஜான் நகருக்கு விசிட் அடிக்க துவங்கியுள்ளனர். படக்குழுவாகட்டும், சுற்றுலாவாசிகளாகட்டும், இப்போது இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு ஐரோப்பாவிற்கு மாற்றாக மாறி வருகிறது. யூரேசியாவின் தெற்கு காகசஸ் பகுதியில், கிழக்கே காஸ்பியன் கடல் மற்றும் வடக்கே ரஷ்யாவின் எல்லையில் வெறும் 1.1 கோடி மக்கள்தொகையுடன் அமைந்துள்ள அஜர்பைஜான், இப்போது இந்தியர்களின் பிரபலமான சுற்றுலா தேர்வாக மாறி வருகிறது. அஜர்பைஜானின் தலைநகரமான பாகு, அதன் "ஐரோப்பிய உணர்விற்கு" பெயர் பெற்றது. அதுவே ஒரு முக்கிய சுற்றுலா மையமாக மாறி வருகிறது. சமீபத்திய ஸ்கைஸ்கேனரின் ட்ராவல் ட்ரெண்ட் 2024 அறிக்கையின்படி, பாகுவுக்கான தேடல்கள் 2023 இல் 438% அதிகரித்துள்ளது.ஆனால் எல்லோரும் ஏன் திடீரென்று இந்த யூரேசிய நாட்டிற்குச் செல்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்?
புதிய டூரிஸ்ட் ஸ்பாட்: அஜர்பைஜான்
அஜர்பைஜானுக்கு விமான டிக்கெட் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. முன்னதாக, அஜர்பைஜானுக்கு செல்லடிக்கெட் விலை, சுமார் ரூ. 50 ஆயிரம் என இருந்தது, தற்போது குறைந்து ரூ.25 ஆயிரமாக இருக்கிறது. கூடுதலாக, நீங்கள் டெல்லியிலிருந்து பாகுவிற்கு 5 மணிநேரத்தில் செல்லலாம். அஜர்பைஜான் சமீபத்தில் தனது இ-விசா செயல்முறையை நெறிப்படுத்தியுள்ளது. அவர்களின் ஆன்லைன் அரசாங்க போர்டல் மூலம் விண்ணப்பித்து பணம் செலுத்தினால், மின்னஞ்சல் மூலம் மூன்று நாட்களுக்குள் விசா வந்துவிடும். விசாவிற்கு USD 20 (தோராயமாக ரூ. 1,600) செலவாகும். அஜர்பைஜான் ஒரு முன்னாள் சோவியத் நாடு என்பதால், ரஷ்ய கட்டிடக்கலை நிறைய உள்ளது. அதோடு, இயற்கை வளமும், சீதோஷண நிலையும் கூட ஐரோப்பாவை ஒத்துள்ளது.