அடிக்கடி பதட்ட உணர்வு தலைதூக்குகிறதா? அப்படியென்றால் நீங்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும்
எவ்வித காரணமுமின்றி, அடிக்கடி, பதட்டமாகவும், கவலையாகவும் உணர்கிறீர்களா? அதற்கு காரணம் உங்கள் உணவு பழக்கமாகவும் இருக்கலாம்! நாள் முழுவதும், நாம் உட்கொள்ளும் உணவானது, பொதுவாக நமது ஆற்றல் நிலைகள், மனநிலை மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகம் பாதிக்கிறது. அப்படி உங்கள் மனதின் பதட்டத்தை அதிகரிக்க கூடிய உணவு வகைகளை, நீங்கள் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது என்னென்ன உணவுகள் என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். தேநீர் மற்றும் காபி: பெரும்பாலான மக்களுக்கு, தினமும் ஒரு கோப்பை டீ அல்லது காபி குடிக்காமல் பொழுதை கழிப்பது என்பது நடவாத காரியம். எனினும், பதட்டத்தை எதிர்க்கொள்ளும் போது, இந்த பானங்களை தவிர்க்க வேண்டும். காரணம், இந்த இரண்டு பானங்களிலும் காஃபின் நிறைந்துள்ளது.
பதட்டத்தை அதிகரிக்கும் உணவு வகைகள்
சாக்லேட்: மன அழுத்தத்தை போக்கக்கூடியது என்று போற்றப்படும் இந்த சாக்லேட்டில், காஃபின் மற்றும் சர்க்கரை ஏராளமாக உள்ளது, இவை இரண்டும் பதட்டத்தை அதிகரிக்க கூடும். எனவே, எப்போதாவது ஒரு முறை உட்கொள்ளலாமே தவிர, அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அது உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, இரத்த ஓட்டத்தில் கார்டிசோலை வெளியிடலாம். சோடா, ஆற்றல் பானங்கள் மற்றும் ஆல்கஹால்: இவ்வகை பானங்கள், இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்கள், நீரிழப்பு, பசியின்மை மற்றும் தூக்க பாதிப்புகளை உண்டாக்கும். அதனால், இவை அனைத்தும் கவலை அல்லது பதட்ட உணர்வை தூண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும், செயற்கை இனிப்புகள் மற்றும் உப்புகள், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, இதன் விளைவாக, ரத்தத்தில், அட்ரினலின் ஓட்டம் அதிகரிக்கிறது.