கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை ஒப்புக்கொண்டது அதை தயாரித்த நிறுவனம்
அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசியால் த்ரோம்போசிஸ் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (டிடிஎஸ்) என்ற இரத்த உறைவுக் கோளாறு ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தடுப்பூசியால் ஏற்படும் நன்மைகளை விட இதனால் ஏற்படும் தீமைகள் அதிகம் என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் உருவாக்கிய இந்த தடுப்பூசியால், அரிதான மற்றும் தீவிரமான இரத்த உறைவு கோளாறு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் முதன்முறையாக நீதிமன்ற ஆவணங்களில் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசி, இந்தியாவில் கோவிஷீல்டு என்றும், ஐரோப்பாவில் வாக்ஸ்செவ்ரியா என்றும் விற்கப்பட்டது.
90 சதவீத இந்திய மக்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை தான் எடுத்துக்கொண்டனர்
இது மாற்றியமைக்கப்பட்ட சிம்பன்சி அடினோவைரஸ் ChAdOx1 ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு வைரஸ் வெக்டர் தடுப்பூசி ஆகும். சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (SII) உடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும் கோவிஷீல்டு, இந்திய நாட்டில் பரவலாக உபயோகிக்கப்பட்டு வரும் தடுப்பூசியாகும். கிட்டத்தட்ட 90 சதவீத இந்திய மக்கள் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்டனர். "த்ரோம்போசிஸ் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம்(TTS) என்பது தடுப்பூசியால் தூண்டப்பட்ட இம்யூன் த்ரோம்போடிக் த்ரோம்போசைட்டோபெனிக் பர்புராவின்(VITTP) ஒரு பகுதியாக நடந்த தீவிர பாதகமான விளைவுகளில் ஒன்றாகும்." என்று தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஈஸ்வர் கிலாடா கூறியுள்ளார். இந்த கோளாறு தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 50,000இல் ஒருவருக்கு(0.002 சதவீதம்) ஏற்படக்கூடும். ஆனால் ஒரு பெரிய மக்கள்தொகையில், இது மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.