ஆசியாவிலும் அடியெடுத்து வைத்த குரங்கம்மை; நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
Mpox வைரஸ் தொற்றான குரங்கம்மை பரவல், ஆப்பிரிக்கா, ஐரோப்பா என கடந்து, தற்போது ஆசியாவில் பாகிஸ்தானில் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொற்று ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், உலக சுகாதார நிறுவனம், கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இதை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இதுவும் கொரோனா போல் மாறிவிடுமா என்ற ஐயம் ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், இந்த நோய்த்தொற்று குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்களை இதில் பார்க்கலாம். நெருங்கிய தொடர்புகள் மூலம் பரவும் இந்த தொற்றுநோய் பொதுவாக லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் என்றாலும், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் உயிரிழப்பை சந்திக்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஆப்பிரிக்காவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள குரங்கம்மை
காங்கோவில் 1970களில் முதல்முறையாக குரங்கம்மை பாதிப்பு அடையாளம் காணப்பட்ட நிலையில், தொடர்ந்து அதன் பாதிப்புகள் இருந்து வருகின்றன. 2022இல் இதன் தீவிரம் அதிகரித்து அடங்கிய நிலையில், தற்போது மீண்டும் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. தற்போதைய பரவலில் மட்டும் 500க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என ஆப்பிரிக்க நோய்த் தடுப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இது உடலுறவு உள்ளிட்ட நெருங்கிய உடல் தொடர்பு மூலம் பரவுகிறது. ஆனால் அது காற்றின் மூலம் எளிதில் பரவுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனினும் தற்போதைய குரங்கம்மை மாறுபாடு மக்களிடையே மிகவும் வேகமாக பரவி வருகிறது.
குரங்கம்மை Mpox வைரஸின் மாறுபாடுகள்
காங்கோவில் கிளாட் 1 மற்றும் கிளாட் 1பி என்ற இரண்டு வகையான Mpox வைரஸ் வகைகள் பரவி வருகின்றன. கிளாட் ஐபி தற்போது கிழக்கு காங்கோவில் இருந்து ருவாண்டா, உகாண்டா, புருண்டி மற்றும் கென்யாவிற்கு மாறியுள்ளது. ஸ்வீடனில் சமீபத்தில் கண்டறியப்பட்ட பாதிப்பு கிளாட் ஐபி வகையைச் சார்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம், பாகிஸ்தானில் கண்டறியப்பட்ட பாதிப்பு எந்த வகையைச் சார்ந்தது என தெரியவில்லை. சிறிது காலத்திற்கு முன்பு இருந்த கிளாட் 2வின் புதிய மாறுபாடு கிளாட் 2பி 2022இல் உலகம் முழுவதும் பரவியது. அது பொதுவாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்களிடையே அதிகம் பரவிய நிலையில், பாதுகாப்பான பாலியல் நடைமுறைகள் மற்றும் தடுப்பூசிகள் மூலம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய அவசரநிலை அறிவிப்பு எதற்காக?
Mpox கொரோனா போன்று மிகவும் தீவிரமானது அல்ல. அதை பரவுவதைத் தடுக்கவும், ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவவும் உரிய நடைமுறைகள் உள்ளன. மேலும் அது எளிதில் பரவாது. அவசரநிலை அறிவிப்புகள் என்பது காங்கோ உள்ளிட்ட நோய்த் தொற்று தீவிரமாக பரவும் நாடுகளில் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் சென்றடைவதை உறுதி செய்வதற்காகவே ஆகும். களநிலவரத்தைப் பொறுத்தவரை, 2022இல் குரங்கம்மையை எதிர்த்து போராடுவதற்கு கிடைத்த அளவிற்கான தடுப்பூசிகள் தற்போது கிடைக்கவில்லை. அதை மாற்றுவதற்கான முயற்சிகளை ஒருபுறம் மேற்கொண்டு வரும் உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசியை கையிருப்பில் வைத்துள்ள நாடுகளில் இருந்து அவற்றை நன்கொடையாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.