வீட்டில் பாத்திரம் கழுவுவது பிடிக்கவில்லையா? அதற்கும் தீர்வு இருக்கு
செய்தி முன்னோட்டம்
டிப்ஸ்: எதை வேண்டுமானாலும் செய்கிறேன், ஆனால் பாத்திரம் மட்டும் கழுவ சொல்லாதீர்கள் என்று சொல்பவரா நீங்கள்?
உங்களுக்கு ஓர் நற்செய்தி! பாத்திரம் கழுவும் சுமையை குறைக்க சில வழிகள் உள்ளன என்கின்றனர் நிபுணர்கள்.
அது என்னென்ன வழிகள் என்பதை இப்போது பார்க்கலாம்.
இலைகளில் சாப்பிட தொடங்குங்கள்
பேப்பர் தட்டு, டம்ளர் போன்றவற்றை அதிகம் உபயோகிக்க தொடங்கலாம். 'யூஸ் அண்ட் த்ரோவ்' பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் பாத்திரம் கழுவும் சுமை பாதியாக குறையும் என்கிறார்கள் சில வல்லுநர்கள். ஆனால், அதிகமாக யூஸ் அண்ட் த்ரோவ் பொருட்களை பயன்படுத்துவது சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், வாழை இலை, பாக்கு தட்டு போன்றவற்றை நாம் அதிகம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
டிப்ஸ்
அதிகமாக உணவை சமைக்கலாம்
ஒவ்வொரு வேளைக்கும் தனித்தனியாக உணவு செய்தால், விடிந்ததில் இருந்து அடைவது வரை பாத்திரம் கழுவிகொண்டே இருக்க வேண்டியது தான். அதனால், ஒரேடியாக உணவை சமைத்து வைத்துக்கொள்வது சிலருக்கு வசதியாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, காலைக்கும் இரவுக்கும் சேர்த்து சட்னி அல்லது குருமா செய்து வைத்துக்கொள்வது. அல்லது மதியத்துக்கும் இரவுக்கும் சேர்த்து சோறை வடித்துவிட்டு, ஒரு வேளை சாம்பார் வைத்து சாப்பிட்டுவிட்டு இன்னொரு வேளைக்கு புளியோதரை செய்வது. ஆனால், நான்கு நாட்களுக்கு சேர்த்து உணவை செய்து, மருத்துவத்திற்கு செலவு வைத்துவிடாதீர்கள்!
கலவை சாதத்தின் மகத்துவம்
சோறு, குழம்பு, பொரியல், அவியல் என்று பல கறிகளை வைப்பதை விடுத்து ஒரே விசிலில் தயாராகும் பருப்பு சாதம், தாக்காளி சாதம் போன்றவற்றை அடிக்கடி செய்ய தொடங்குங்கள்.
டிப்ஸ்
பாத்திரத்தை சேர விடாதீர்கள்
பாத்திரத்தை சிங்கில் போட்டவுடன் கழுவுவது தான் மிக எளிதாக பாத்திரம் கழுவும் வழிமுறையாகும். பாத்திரம் அதிகம் சேர சேர தான் நமக்கு எரிச்சலும் அதிகரிக்கும். பாத்திரத்தையும் மன அழுத்தத்தையும் சேர விடாதீர்கள்.
பாத்திரங்களை அப்புறப்படுத்துங்கள்
தேவையில்லாத பாத்திரங்கள் அனைத்தையும் மூட்டை கட்டி ஒரு மூலையில் போடுங்கள். இருவர் மட்டுமே வசிக்கும் ஒரு வீட்டுக்கு 5 தட்டுகள், 8 டம்ளர்கள், 25 ஸ்பூன்கள் தேவையில்லை. அதேபோல் தேவையில்லாத குக்கர்கள், கரண்டிகள் போன்றவற்றையும் அப்புறப்படுத்துங்கள். இனி எப்படி பாத்திரம் சேரும் என்பதை நாமும் பார்த்துவிடலாம். இது எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால், பேசாமல் கடையில் வாங்கி சாப்பிட்டுவிட்டு குப்புற படுங்க பாஸ்!