முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
இந்திய நாட்டின் பணக்காரர்களுள் ஒருவரும், ரிலையன்ஸ் நிறுவன தலைவருமானவர் முகேஷ் அம்பானி. இவருக்கு கடந்த வாரம் 3 மின்னஞ்சல்கள் வந்துள்ளது. அதில் ரூ. 20 கோடி, ரூ. 200 கோடி, ரூ.400 கோடி தொகை கேட்டும், பணம் தராவிடில் முகேஷ் அம்பானி கொலை செய்யப்படுவார் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு குழு தலைவர் மும்பை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் நடந்த விசாரணையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தினை சேர்ந்த கணேஷ் ரமேஷ் வனபர்தி(19) என்பவர் தான் இந்த மிரட்டலை விடுத்ததாக கூறி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வரும் 8ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிப்பு
கைது செய்யப்பட்ட வாலிபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவருக்கு வரும் 8ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்த மின்னஞ்சல், பெல்ஜியத்தில் இருந்து சஹாதப் கான் என்பவருடைய முகவரியில் இருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எனினும் இதில் உண்மைத்தன்மை இருக்க வாய்ப்பில்லை என்றும். வெளிநாட்டில் இருந்து மின்னஞ்சல் அனுப்பியது போல் காண்பித்து கொள்ள VPN முறையினை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதேபோல், ஏற்கனவே முகேஷ் அம்பானிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கடந்தாண்டு மிரட்டல் விடுத்த பீகார் மாநிலத்தினை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.