'20 கோடி பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுவோம்': முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முகேஷ் அம்பானியின் நிறுவனத்தின் ஐடிக்கு அடையாளம் தெரியாத நபர் அனுப்பிய இ-மெயிலில், முகேஷ் அம்பானி ரூ.20 கோடி செலுத்த வேண்டும், இல்லையெனில் அவர் கொல்லப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. "எங்களுக்கு ரூ.20 கோடி தராவிட்டால் உன்னை கொன்று விடுவோம். இந்தியாவிலேயே சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் எங்களிடம் உள்ளனர்" என அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் பாதுகாப்புப் பொறுப்பாளரின் புகாரின் அடிப்படையில், மும்பையில் உள்ள காம்தேவி போலீஸார் அந்த தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முகேஷ் அம்பானிக்கு தொடர்ந்து வரும் கொலை மிரட்டல்கள்
அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்(ஐபிசி)சட்டப்பிரிவு 387 (ஒரு நபரை மிரட்டி பணம் பறிப்பது) மற்றும் சட்டப்பிரிவு 506(2)(கிரிமினல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்ததற்காக பீகாரின் தர்பங்காவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரையும், மும்பையில் உள்ள சர் ஹெச்என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையையும் வெடி வைத்து தகர்க்கப் போவதாக அவர் மிரட்டி இருந்தார்.