ரூ.22000 சம்பளத்திற்காக 50,000 பேர் விண்ணப்பம்: மும்பையில் வேலைக்கான நேர்காணலில் ஏற்பட்ட நெரிசல்
மும்பையில் ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நடத்திய வாக்-இன் நேர்காணலுக்கு ஆயிரக்கணக்கான வேலை தேடுபவர்கள் வந்ததால் நெரிசல் அதிகரித்தது. மும்பையின் கலினாவில் நடைபெற்ற இந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக குஜராத்திலும் இது போன்ற தள்ளுமுள்ளு சம்பவம் நடைபெற்றது நினைவிருக்கலாம். அதன் அதிர்ச்சி ஓய்வதற்குள் தற்போது மீண்டும் இது போன்ற வேலைவாய்ப்பு நேர்காணலில் அதிகரித்த மக்கள் கூட்டம் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
1800 காலி இடங்களுக்கு குவிந்த பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள்
ஏர் இந்தியா நிறுவனத்தில், பழுது மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான 1,800 காலியிடங்களுக்கு சுமார் 50,000 பேர் வந்திருந்தனர். இந்த பணிக்கு சம்பளம் ரூ.22,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், நெரிசல் போன்ற சூழ்நிலையைத் தடுக்க, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை டெபாசிட் செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஏவியேஷன் இண்டஸ்ட்ரி எம்ப்ளாய்ஸ் கில்டின் பொதுச் செயலாளர் ஜார்ஜ் ஆப்ராம், ஆட்சேர்ப்பு செயல்முறை தவறாக நிர்வகிக்கப்பட்டதாகவும், 50,000 வேலை தேடுபவர்கள் நேர்காணலுக்கு வந்திருப்பதாகவும் கூறினார்.