தலைமை நீதிபதி குறித்து தவறாக பேசியதற்காக எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது
மணிப்பூர் வன்முறை மற்றும் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறித்து ஆத்திரமூட்டும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை இன்று(ஜூலை 29) கைது செய்துள்ளது. பத்ரி சேஷாத்ரி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது, மணிப்பூர் வன்முறை மற்றும் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறித்து அவமதித்து பேசியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. "உங்களால்(அரசால்) எதுவும் செய்ய முடியாவிட்டால், நாங்கள்(நீதிமன்றம்) செய்வோம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சந்திரசூட்டை அங்கு துப்பாக்கியைக் கொடுத்து அனுப்புவோம். அவரால் அமைதியை மீட்டெடுக்க முடியுமா என்பதை பார்ப்போம்" என்று பத்ரி சேஷாத்ரி அந்த யூடியூப் பேட்டியில் பேசி இருக்கிறார்.
இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்
மேலும், "மணிப்பூர் மலைப்பாங்கான மற்றும் சிக்கலான பகுதி. அதனால், அங்கு கொலைகள் நடக்கும். வன்முறையை தடுக்க முடியாது" என்று சேஷாத்ரி கூறியிருந்தார். இந்த யூடியூப் பேட்டியை பார்த்த வழக்கறிஞர் கவியரசு, பத்ரி சேஷாத்ரிக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து, 153, 153A மற்றும் 505(1)(B) ஆகிய பிரிவுகளின் கீழ் சேஷாத்ரியை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே, பத்ரி சேஷாத்ரியை கைது செய்ததற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "இந்த ஊழல் நிறைந்த திமுக அரசு, சாமானிய மக்களின் கருத்தைக் கேட்க சக்தியின்றி கைதுகளை மட்டுமே நம்பியுள்ளது. ஊழல் நிறைந்த திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை அமல்படுத்துவது மட்டும்தான் தமிழக காவல்துறையின் வேலையா?" என்று அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.