மல்யுத்த வீரர்கள் வழக்கு: பிரிஜ் பூஷனுக்கு இரண்டு நாள் இடைக்கால ஜாமீன்
பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், ஆறு பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக போடப்பட்ட வழக்கில், அவருக்கு டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அவரது செயலாளர் வினோத் தோமருக்கும் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. WFI தலைவர் பிரிஜ் பூஷன் மற்றும் வினோத் தோமர் ஆகியோரின் ஜாமீன் மீதான விசாரணை ஜூலை 20 ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அடுத்த விசாரணை தேதி வரை, ரூ.25,000 பிணையில் அவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிரிஜ் பூஷன், தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தையும் மறுத்துள்ளார்.
"பிரிஜ் பூஷண் ஒரு நிரபராதி": வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதம்
"பிரிஜ் பூஷண் ஒரு நிரபராதி. அவர் மீதான குற்றப்பத்திரிகை பொய்கள் நிறைந்தது. அரசியல் சதியின் ஒரு பகுதியாக அது உள்ளது." என்று பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் நீதிமன்றத்தில் கூறினார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் எம்பியுமான பிரிஜ் பூஷன், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரை கைது செய்யக்கோரி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் பல நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அந்த போராட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டிருந்தாலும், "எங்கள் போராட்டம் நீதிமன்றத்தில் தொடரும்" என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். கடந்த 15ஆம் தேதி பிரிஜ் பூஷனுக்கு எதிராக 1000 பக்க குற்றப்பத்திரிகையை டெல்லி போலீஸார் தாக்கல் செய்தனர்.