
விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மல்யுத்த வீரர்கள் கோரிய 5 கோரிக்கைகள்
செய்தி முன்னோட்டம்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் இன்று(ஜூன் 7) விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து ஐந்து முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.
பிரிஜ் பூஷனை கைது செய்யக் கோரி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் நான்கு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், மல்யுத்த வீரர்களின் கோரிக்கைகளை கேட்க விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று காலை அவர்களை சந்தித்தார்.
details
மல்யுத்த வீரர்கள் அமைச்சரிடம் கோரிய 5 கோரிக்கைகள் பின்வருமாறு:-
1. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவராக பெண் ஒருவர் பொறுப்பேற்க வேண்டும்.
2. பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த யாரும் மல்யுத்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக்கூடாது.
3. மல்யுத்த அமைப்பிற்கு "சுதந்திரமான மற்றும் நியாயமான" முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
4. ஏப்ரல் 28-ம் தேதி ஜந்தர் மந்தரில் வைத்து சட்ட ஒழுங்கை மீறியதாகக் கூறி மல்யுத்த வீரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட FIR ரத்து செய்யப்பட வேண்டும்.
5. பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட வேண்டும்.
ஐந்து நாட்களில் மல்யுத்த வீரர்களுக்கும் அரசுக்கும் இடையே நடக்கும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும். கடந்த சனிக்கிழமை மல்யுத்த வீரர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர்.