உலகிலேயே மிக நீளமான கூந்தல் - இந்திய பெண் கின்னஸ் சாதனை
இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் உலகிலேயே மிக நீளமான கூந்தல் கொண்டவர் என்னும் சாதனையினை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தினை சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா(46). இவர் தனது சிறுவயது முதலே தனது கூந்தலை பராமரிப்பதிலும், கூந்தலை வளர்ப்பதிலும் அதிகளவு ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. பொதுவாக பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதில் முடியினை வெட்டி விடுவது சகஜம். அப்படி தான் இவரது பெற்றோரும் வெட்டியுள்ளனர். ஆனால் இவர் 14 வயதுக்கு பிறகு முடியை வெட்டுவதை தவிர்த்துள்ளார். இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக தனது முடியினை வெட்டாமல் மிகவும் கூர்ந்து பராமரித்து வந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா தற்போது கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
7 அடி 9 அங்குலம் கொண்ட நீளமான முடி
உலகிலேயே மிக நீளமான கூந்தல் கொண்டவர் என்னும் பெருமைக்கு சொந்தக்காரரான இவரது முடியின் நீளம் 7 அடி 9 அங்குலம் என்று கூறப்படுகிறது. 80'களில் பாலிவுட் நடிகைகள் நீளமான முடியினை வைத்திருப்பர், அதனை கண்டே தனக்கு முடியை நீளமாக வளர்க்கவேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டதாக ஸ்மிதா கூறுகிறார். 'பெண்களுக்கு அழகே இந்த கூந்தல் தான்' என்று கூறும் இவர் தனது முடி பராமரிப்பு குறித்தும் தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி இவர் தனது கூந்தலை வாரத்தில் இருமுறை நன்றாக அலசுவாராம். அவ்வாறு அலசி, உலர்த்தி-சிக்கெடுத்து, முடியை ஸ்டைல் செய்ய இவருக்கு சுமார் 3 மணிநேரம் ஆகும் என்று தெரிவித்துள்ளார். தனது கூந்தலை நன்றாக அலச மட்டுமே இவருக்கு 45 நிமிடங்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.