உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி
மகாராஷ்டிராவின் சந்திராபூர் மற்றும் யவத்மால் மாவட்டங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் விபத்து தடுப்புச் சுவர் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று(மார்-4) தெரிவித்தார். இப்படி ஒரு விபத்து தடுப்பு கட்டப்படுவது உலகில் இதுவே முதல்முறை என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டிற்கும் அதன் மூங்கில் துறைக்கும் இது ஒரு "குறிப்பிடத்தக்க சாதனை" என்று கூறிய நிதின் கட்கரி, இந்த விபத்து தடுப்பானது எஃகுக்கு சரியான மாற்று என்றும் சுற்றுச்சூழல் கவலைகளை இது நிவர்த்தி செய்கிறது என்றும் கூறியுள்ளார். "உலகின் முதல் 200 மீட்டர் நீளமுள்ள மூங்கில் விபத்து தடுப்பு, வாணி-வரோரா நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டதன் மூலம் தற்சார்பு இந்தியாவை அடைவதற்கான ஒரு அசாதாரண சாதனை படைக்கப்பட்டுள்ளது." என்று கட்கரி கூறியுள்ளார்.
சுற்றுசூழலுக்கு ஏற்ற தடுப்புகள்: நிதின் கட்காரி
மேலும், இந்த மூங்கில் விபத்து தடுப்புச்சுவருக்கு "பஹு பல்லி" என பெயரிடப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். "இது இந்தூரில் இருக்கும் நேஷனல் ஆட்டோமோட்டிவ் டெஸ்ட் டிராக்குகள் (NATRAX) போன்ற அரசாங்கத்தால் நடத்தப்படும் பல்வேறு நிறுவனங்களில் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கூடுதலாக, இது இந்திய சாலை காங்கிரஸால் அங்கீகாரம் செய்யப்பட்டது." என்று நிதின் கட்காரி இன்னொரு ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். மேலும், மூங்கில் தடைகளின் மறுசுழற்சி விகிதம் 50-70 சதவீதம் என்றும், எஃகு தடைகளின் மறுசுழற்சி விகிதம் 30-50 சதவீதம் என்றும் கட்கரி கூறி இருக்கிறார்.