ரிவர்ஸ் கியரில் இருப்பது தெரியாமல் காரின் ஆக்சிலேட்டரை அழுத்திய பெண் பள்ளத்தில் விழுந்து பலி
மகாராஷ்டிரா: வாகனம் ரிவர்ஸ் கியரில் இருந்தபோது காரின் ஆக்சிலேட்டரை தவறுதலாக அழுத்தியதால் 23 வயது பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார். அவர் தவறுதலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதும் அவரது கார் மகாராஷ்டிராவில் இருக்கும் ஒரு பள்ளத்தாக்கில் விழுந்தது. நேற்று மதியம் ஔரங்காபாத் என்று அழைக்கப்படும் சத்ரபதி சம்பாஜிநகரில், அந்த பெண்ணின் தோழர் காருக்கு வெளியே நின்று ஒரு ரீலைப் பதிவுசெய்து கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. உயிரிழந்த ஸ்வேதா சர்வாஸ் என்ற பெண்ணுக்கு கார் ஓட்டத் தெரியாது. முதல் முறையாக காரை ஓட்டி அதை ரீலாக பதிவு செய்ய அவர் விரும்பினார். இந்நிலையில், அந்த 23 வயது பெண் தனது வெள்ளை நிற செடான் காரை ஓட்ட முயன்றார்.
அவரது நண்பர் பதிவு செய்த வீடியோ வைரல்
அவர் கார் ஓட்டுவதை அவரது நண்பர் காருக்கு வெளியே நின்று வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்த போது, ரிவர்ஸ் கியரில் இருந்த அந்த கார் பின்னால் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த சம்பவத்தின் போது பதிவான ரீல்ஸ் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பள்ளத்தாக்கில் விழுந்த அந்த பெண்ணையும் வாகனத்தையும் மீட்புப் படையினர் சென்றடைய ஒரு மணி நேரம் ஆனது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட ஸ்வேதா சர்வாஸை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.