மருத்துவர்கள் புறக்கணித்ததால் ஹரியானா மருத்துவமனைக்கு வெளியே இருந்த காய்கறி வண்டியில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள அரசு மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஒரு பெண் காய்கறி வண்டியில் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அந்த கர்ப்பிணியின் கணவர் பலமுறை உதவி கேட்டும் மருத்துவர்கள் கவனம் செலுத்த மறுத்ததாகக் கூறப்படுகிறது. கடும் குளிர் காலத்தில் எந்த ஒரு கவனிப்பும் இல்லாமல் அரசு மருத்துவமனையில் ஒரு கர்ப்பிணிக்கு மருத்துவ உதவி மறுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கடவுள்தான் அவர்களைக் காப்பாற்றினார். மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை நான் கடவுளாகக் கருதினேன். ஆனால் நேற்றிரவு நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, இந்த மருத்துவமனை ஊழியர்கள் மீது இருந்த நம்பிக்கை இழந்துவிட்டது." என்று அந்தத் கர்ப்பிணி பெண்ணின் கணவர் கூறியுள்ளார்.
"குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்": மாநில சுகாதாரத்துறை அமைச்சர்
பஞ்சாபின் மொஹாலி மாவட்டத்தில் உள்ள டப்பார் நகரத்தில் வசித்து வரும் நபர், தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்குக் கொண்டு வந்த பிறகு மருத்துவ உதவியை கோரி அங்கும் இங்கும் ஓடி அலைந்திருக்கிறார். ஆனால், ஒரு கர்ப்பிணிக்கு ஸ்ட்ரெச்சரைக் கூட யாரும் கொண்டுவரவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அந்த பெண் மருத்துவமனை வாசலுக்கு அருகில் உள்ள தெருவில் திறந்த வெளியில் குழந்தையை பெற்றுக்கொண்டார். இந்த சம்பவம் நடந்ததும் மருத்துவமனையில் பீதி ஏற்பட்டது. அதன் பிறகு, தாயும் குழந்தையும் இறுதியாக உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு ஒரு வார்டில் சேர்க்கப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் முழுமையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.