உத்தரகாண்டில் நிலச்சரிவு காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகள் பலி
உத்தரகாண்டின் தெஹ்ரி மாவட்டத்தில் இன்று பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, பல வீடுகள் மற்றும் கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், இடிபாடுகளுக்கு அடியில் 42 வயது பெண்ணும், அவரது டீனேஜ் மகளும் புதைக்கப்பட்டனர். டோலி கிராமத்தில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்த சரிதா தேவி மற்றும் 15 வயது அங்கிதாவின் உடல்களை மீட்புப் படையினர் வெளியே எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களது வீட்டின் பின்புறம் இருந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக மாவட்ட ஆட்சியர் (டிஎம்) மயூர் தீட்சித் கூறியுள்ளார்.
கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் மக்கள் கடும் அவதி
நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்கவும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். "டெஹ்ரி மாவட்டத்தில் புத்தகேதார் அருகே உள்ள டோலி கிராமத்தில் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் குறித்து சோகமான செய்தி கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்கவும், அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லவும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, "என்று முதல்வர் ட்விட்டரில் பஹிவிட்டுள்ளார். புதகேதாரில் உள்ள பல கடைகள் தர்மகங்கா ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன, மேலும் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் பல பாலங்களையும் சேதப்படுத்தியது. ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.