
மதுக்கடைகளை மாட்டு கொட்டகையாக மாற்றுவோம்: பாஜகவின் உமாபாரதி
செய்தி முன்னோட்டம்
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான உமாபாரதி, மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு மது அருந்துவதே காரணம் என்று பேசினார்.
மேலும், விதிகளை மீறி செயல்படும் மதுபானக் கடைகளை மாட்டு கொட்டகையாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், "மதுஷாலா மே கவுஷாலா"(மதுபானக் கடைகளுக்குள் மாட்டு கொட்டகைகள்) என்ற திட்டத்தை ஆரம்பிக்க போவதாக கூறினார்.
பல நாட்களாகவே அரசின் மதுக் கொள்கைக்கு எதிராக உமாபாரதி தனது எண்ணங்களை வெளிப்படுத்தி வருகிறார்.
சென்ற மாதம், மத்தியப் பிரதேசத்தின் மதுக்கொள்கை குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கடிதமும் எழுதியிருந்தார்.
பாஜக
மதுக்கடைகளை மாற்றத் தொடங்குவேன்: பாரதி
அயோத்தி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய பாரதி, நிவாரி மாவட்டத்தின் ஓர்ச்சாவில் உள்ள புகழ்பெற்ற ராம் ராஜா சர்க்கார் கோயிலுக்கு அருகில் இருக்கும் மதுபானக் கடை சட்டவிரோதமானது என்று செவ்வாய்க்கிழமை(ஜன 31) தெரிவித்தார்.
மதுபானக் கொள்கைக்காகக் காத்திருக்காமல், விதிகளை மீறி நடத்தப்படும் மதுபானக் கடைகளை மாட்டு கொட்டகைகளாக மாற்றத் தொடங்குவேன் என்று பாரதி கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
"யார் என்னைத் தடுக்கத் துணிகிறார்கள் என்று பார்க்கிறேன்.. மதுபானக் கடைகளில் மாடுகளுக்கு உணவளித்து, தண்ணீர் காட்டுவேன்" என்றும் பாரதி கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு மது அருந்துவதும் ஒரு காரணம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.