2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்போம்: மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்துள்ளார். காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக மம்தா பானர்ஜி கூறுவது இதுவே முதல் முறையாகும். காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் எதிர் காட்சிகளாக இருந்தாலும், அவை இரண்டும் கூட்டணி கட்சிகளாக மாறும் என்று எதிர்பார்க்க முடியாத சூழ்நிலையே நிலவி வந்தது. இந்தியாவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளாமல் இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகிறது. அவற்றுள் திரிணாமுல் காங்கிரஸும் ஒன்றாகும். மற்றொரு எதிர்க்கட்சி, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி காட்சியாகும். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
வலுவான பிராந்திய கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்: மம்தா
வரவிருக்கும் தேர்தல் போரில், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்தால் பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் உள்ளது. ஆனால், அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைவது கூட்டணி பிரச்சனையாக மட்டுமல்லாமல், கொள்கை பிரச்சனையாகவும் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், "எங்கெல்லாம் காங்கிரஸ் பலமாக இருக்கிறதோ, அங்கெல்லாம் போராடட்டும். நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கிறோம், அதில் தவறில்லை. ஆனால் அவர்கள் மற்ற அரசியல் கட்சிகளையும் ஆதரிக்க வேண்டும்." என்று மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். வலுவான பிராந்திய கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.