ஜாமீனில் வந்ததும் மீண்டும் அமைச்சராக்கப்படுவாரா செந்தில் பாலாஜி?
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 26) ஜாமீன் வழங்கியது. இதுகுறித்து செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், அண்மையில் ஜாமீன் வழங்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் வெவ்வேறானவை என்றார். உச்சநீதிமன்ற உத்தரவின் படியும், செந்தில் பாலாஜி மீது போடப்பட்டிருக்கும் வழக்கின் முகந்திரத்தின் படியும், செந்தில் பாலாஜி சட்டபூர்வமாக அமைச்சராவதற்கு எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன
மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்று 4 வது ஆண்டு இது. முதலமைச்சராக அவர் தமிழக அமைச்சரவையை இதுவரை 4 முறை மாற்றி அமைத்துள்ளார். ஏற்கனவே அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுக்கள் எழுந்த நிலையில், ஏமாற்றம் உள்ளதாக மாற்றம் நடக்கும் என முதல்வர் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான் தற்போது செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வருகிறார். அவர் வெளிவருவதற்காகவே அமைச்சரவை மாற்றம் தாமதப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. விரைவில் அமைச்சரவை மாற்றத்திற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும், அதில் செந்தில் பாலாஜிக்கு இலாக்கா தரப்படக்கூடும் எனவும், கூடுதலாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியும் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.