"50% உச்சவரம்பு நீக்கப்படும், தேவையான அளவுக்கு இடஒதுக்கீடு தரப்படும்": ராகுல் காந்தி
ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50 சதவீத உச்சவரம்பை நீக்கி, தலித், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டுப் பலன்களை காங்கிரஸ் உயர்த்தும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரத்லமில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, அரசியல் சாசனத்தைக் காப்பாற்றவே இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது என்றார். "பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் அரசியல் சாசனத்தை முறியடிக்க விரும்புகின்றன. அதை மாற்ற வேண்டும். காங்கிரஸும் இண்டியா கூட்டணியும் அதைக் காப்பாற்ற முயற்சிக்கின்றன. இந்த அரசியலமைப்பு நமக்கு ஜல்(நீர்), ஜங்கல்(காடு), ஜமீன்(நிலம்) ஆகிய உரிமைகளை வழங்கியுள்ளது. நரேந்திர மோடி அவற்றை அகற்ற விரும்புகிறார். அவருக்கு முழு அதிகாரம் வேண்டும்" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
'மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது': காங்கிரஸ்
வெற்றி பெற்றால் அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பாஜக தலைவர்கள் அறிவித்துள்ளனர். அதனால்தான் 400 இடங்கள் என்ற முழக்கத்தை அவர்கள் எழுப்பி வருகின்றனர். ஆனால் 400ஐ விடுங்கள், அவர்களுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது. இடஒதுக்கீட்டை நீக்குவோம் என்று சொல்கிறார்கள். இந்த இடத்தில் இருந்து சொல்கிறேன், 50 சதவீத வரம்பைத் தாண்டி இடஒதுக்கீட்டை நாங்கள் அதிகரிப்போம். ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தேவையோ, அவ்வளவு இடஒதுக்கீடு வழங்குவோம்''என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான உச்சகட்ட பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே இடஒதுக்கீட்டுக்கான விவாதம் சூடுபிடித்துள்ளது.