
மன்னிப்பு கேட்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி அதிரடி பதில்
செய்தி முன்னோட்டம்
2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.
எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்னும் பெயரினை பொதுவாக வைத்துள்ளார்கள் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக.,எம்எல்ஏ.,பர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கினை பதிவு செய்திருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதனையடுத்து அவரது எம்.பி.பதவி பறிக்கப்பட்டது.
தொடர்ந்து இவரது மேல்முறையீட்டு மனுவினை சூரத் அமர்வு நீதிமன்றம் விசாரித்ததையடுத்து, சூரத் நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
ராகுல் காந்தி
பிராமண பத்திரம் தாக்கல்
இதனை தொடர்ந்து, மீண்டும் ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அங்கும் அவரது தண்டனையினை தள்ளுபடி செய்ய மறுக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ராகுல் காந்தி தரப்பில் பிரமாண பாத்திரம் நேற்று(ஆகஸ்ட்.,2) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், "அவமதிப்பு வழக்கில் நான் குற்றவாளி இல்லை. நான் தவறாக பேசவில்லை என்பதால் மன்னிப்பு கோர முடியாது. மன்னிப்பு கோர வேண்டுமென்றால் அதனை முன்னரே செய்திருப்பேன்" என்று கூறியுள்ளார்.
மேலும், தனது தண்டனையினை ரத்து செய்ய வேண்டும் என்றும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.