ராகுல் காந்தி மேல்முறையீடு வழக்கு - ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒத்திவைப்பு
ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ள மனு குறித்து பதில் அளிக்குமாறு பர்னேஷ் மோடிக்கும், குஜராத் அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார். இதுபெரும் சர்ச்சையானதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக., எம்.எல்.ஏ. புனரேஷ்மோடி அவமதிப்பு வழக்கினை சூரத் நீதிமன்றத்தில் பதிவுச்செய்திருந்தார். அதன்படி, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று சூரத் நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கியது. இந்த தண்டனையினை நிறுத்தி வைக்க கோரி குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி செய்திருந்த மேல்முறையீட்டு மனுவும் அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டு, சட்டரீதியாக ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை சரிதான் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இடைக்கால உத்தரவினை பிறப்பிக்க முடியாது - உச்சநீதிமன்றம் மறுப்பு
இதனையடுத்து ராகுல் காந்தி குஜராத் நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று(ஜூலை.,21) நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் பர்னேஷ் மோடியும், குஜராத் அரசும் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க வேண்டும் என்று கூறி நீதிபதிகள் ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையினை வரும் ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். அதே போல் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவினை பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.