'இந்தியப் படைகள் மே மாதத்திற்குள் மாலத்தீவை விட்டு வெளியேறும்': மாலத்தீவு அதிபர்
இன்று நடைபெற்ற மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் நாடாளுமன்ற உரையின் போது அவர், "எங்கள் இறையாண்மையில் தலையிடவோ அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்தவோ எந்த நாட்டையும் நம் நாடு அனுமதிக்காது" என்று கூறினார். மேலும், மே 10 ஆம் தேதிக்குள் இந்தியப் படைகள் மாலத்தீவை விட்டு வெளியேறும் என்ற முடிவை இரு நாடுகளும் எட்டியுள்ளதாக மாலத்தீவு அதிபர் தெரிவித்துள்ளார். மாலத்தீவு நாட்டில் உள்ள மூன்று விமான தளங்களில் ஒன்றில் உள்ள இந்திய துருப்புக்கள் மார்ச் 10 ஆம் தேதிக்குள் வெளியேறும் என்றும், மற்ற இரண்டில் உள்ள இந்திய படைகள் மே 10 ஆம் தேதிக்குள் வெளியேறும் என்றும் அதிபர் முய்ஸு கூறினார்.
அதிபர் உரையை புறக்கணித்த 2 கட்சிகள்
"இந்தியாவுடனான ஒப்பந்தத்தை மாலத்தீவு புதுப்பிக்காது. எமது இறையாண்மையில் தலையிடவோ அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்தவோ எந்த நாட்டையும் மாலத்தீவு அனுமதிக்க மாட்டோம்" என்று அதிபர் கூறியுள்ளார். மாலத்தீவின் இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை இன்று நடைபெற்ற அதிபர் முகமது முய்சுவின் நாடாளுமன்ற உரையை புறக்கணித்தன. அதிபரின் 'இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை' கண்டித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. மனிதாபிமான உதவி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக மாலத்தீவில் இந்தியா 87 துருப்புகளை நிறுத்தியுள்ளது. மாலத்தீவின் விவகாரங்களில் இந்திய தலையீட்டை குறைப்பதற்காக மாலத்தீவு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.