'அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலுக்கு முன் கைது செய்யப்பட்டது ஏன்?' EDயிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட நேரம் தொடர்பான கேள்விகளுக்கு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பதிலளிக்குமாறு அமலாக்க இயக்குனரகத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தன்னை கைது செய்து சிறையில் அடைத்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலுக்கு முன் கைது செய்யப்பட்டது ஏன் என்று அமலாக்க இயக்குநரகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதி சஞ்சீவ் கண்ணா, "சுதந்திரம் மிகவும் முக்கியமானது, அதை நீங்கள் மறுக்க முடியாது. கடைசிக் கேள்வி, அவரை பொதுத் தேர்தலுக்கு முன்பு ஏன் கைது செய்ய முடிவு செய்தீர்கள்." என்று கூறியுள்ளார்.
மே 3ஆம் தேதி அன்று ED பதிலளிக்க உத்தரவு
அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, அவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான எந்த தடயமும் இல்லை என்றும், இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நேரடித் தொடர்பு இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அடுத்த விசாரணை நடைபெறும் மே 3ஆம் தேதி அன்று ED பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டது. டெல்லி மதுக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கெஜ்ரிவால் மார்ச் 21 அன்று அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 1ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவர், மே 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் இருப்பார்.