விமானக் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வருவது ஏன்?
ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுள் இந்தியாவிலேயே விமான பயணங்களுக்கான கட்டணம் மிக அதிக அளவாக 41% வரை உயர்ந்திருப்பதாக சில நாட்களுக்கு முன் வெளியிட்ட தங்கள் ஆய்வு முடிவில் குறிப்பிட்டிருந்தது. குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே விலை உயர்வு காணப்பட்டதாகவும், அதனை தாங்கள் தலையிட்டு 60% வரை குறைத்திருப்பதாகவும் மத்திய அரசு கூறியிருக்கிறது. விமானக் கட்டணத்தை நிர்ணயிப்பது யார்? ஏர்கிராஃப்ட் விதிகள், 1937-ன், விதி 137-க்கு உட்பட்டு விமான நிறுவனங்களே விமானப் பயணங்களுக்கான கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. DGCA (Directorate General of Civil Aviation) அமைப்பானது விமானப் போக்குவரத்துத் துறையை ஒழுங்குபடுத்தும் அமைப்பு மட்டுமே, அது விமானக் கட்டணங்களை நிர்ணயிப்பதில் எந்த பங்கும் வகிக்காது.
விமானக் கட்டணம் ஏன் உயர்கிறது?
விமானக் கட்டணம் உயர்வதும், குறைவதும் சந்தை நிலவரங்களைப் பொருத்தே அமைகிறது. விடுமுறை நாட்கள், விழாக்காலங்கள், நீண்ட விடுமுறைக் காலம், சந்தை நிலவரம், ஒரு வழித்தடத்தில் இருக்கும் போட்டி, விமானம் பயணிக்கும் தூரம் மற்றும் விமான இருக்ககைக்கான தேவை ஆகியவற்றைப் பொருத்தே அமைகிறது. பொதுவாக மே, ஜூன், அக்டோபர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் தேவையின் காரணமாக விமானக் கட்டணம் அதிகமாகவே இருக்குமாம். கொரோனா காலத்திற்கு பிறகு விமானப் பயணத்திற்கு அதிகரித்த தேவை, விமானத்திற்குத் தேவையான டர்பைன் எரிபொருளின் விலை உயர்வு மற்றும் விமானப் போக்குவரத்துச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஆகியவற்றின் காரணமாகவே விமானக் கட்டணம் தொடர்ந்து உயர்ந்து வந்திருக்கிறது. இது நீண்ட கால நோக்கில், விமானப் போக்குவரத்து சந்தைக்கு நல்லதல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.