உத்தரகாண்டில் பயங்கர காட்டுத் தீ: வன ஊழியர்கள் தேர்தல் பணிக்கு அனுப்பப்பட்டதால் உச்ச நீதிமன்றம் காட்டம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று மாநில அரசை கடுமையாக சாடியுள்ளது. வனத் தீயணைப்புப் பணியாளர்கள் தேர்தல் பணிக்கு ஏன் அனுப்பப்பட்டார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரகாண்ட் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, "காட்டு தீக்கு மத்தியில் தேர்தல் பணியில் வன தீயணைப்பு ஊழியர்களை ஏன் நியமித்தீர்கள்?" என்று உச்ச நீதிமன்றம் உத்தரகாண்ட் அரசின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியது. உத்தரகாண்டில் காட்டுத் தீ விவகாரம் தொடர்பான மனுக்கள் விசாரணையின் போது பேசிய வழக்கறிஞர் பரமேஷ்வர் என்பவர், "பெரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது, 40 சதவீத வனப்பகுதி தீயில் எரிந்து கொண்டிருக்கிறது." என்று கூறினார்.
நவம்பர் முதல் 1,437 ஹெக்டேர் காடுகள் பாதிப்பு
அந்த வழக்கறிஞருக்குப் பதிலளித்த உத்தரகாண்ட் வழக்கறிஞர், புதிய தீ விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறினார். மேலும், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த நிதியையும் வழங்கவில்லை என்றும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும், "இந்த தீயை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநிலத்தின் ஆறு பேர் கொண்ட குழு பணி புரிந்து வருகிறது. தீயை அணைப்பதற்காக 9,000 க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகிறார்கள்." என்று கூறினார். உத்தரகாண்டில் ஏற்பட்ட காட்டுத் தீயால் நவம்பர் முதல் 1,437 ஹெக்டேருக்கும் அதிகமான பசுமைப் பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக வனத் துறை புல்லட்டின் தெரிவித்துள்ளது.