இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ம் நாள் 'தேசிய கல்வி தினமா'கக் கொண்டாடப்படுவது ஏன்?
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11ம் தேதியானது தேசிய கல்வி தினமாகக் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் நினைவாகவும், சுதந்திர இந்தியாவில் கல்வியில் அவர் மேற்கொண்ட முன்னேற்றங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் விதமாகவும் அவர் பிறந்த நாளான நவம்பர் 11-ஐ தேசிய கல்வி தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 1947, ஆகஸ்ட் 15ம் தேதி முதல், 1958, பிப்ரவரி 2ம் நாள் வரை சுதந்திர இந்தியாவின் கல்வியமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார் அபுல் கலாம் ஆசாத். 1888, நவம்பர் 11ம் தேதி பிறந்த அவர், கல்வியமைச்சர் பதிவியில் இருந்து விலகிய ஒரு மாதத்திற்குள் 1958, பிப்ரவரி 22ம் நாள் காலமானார்.
சுதந்திர இந்தியாவின் கல்வித்துறையில் அபுல் கலாம் ஆசாசத்தின் பங்களிப்பு:
சுதந்திர போராட்ட வீரராகவும், அறிஞராகவும், கல்வியாளராகவும் போற்றப்பட்டு, இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவாரக இருந்த அபுல் கலாம் ஆசாத் இந்தியாவின் கல்விக் கட்டமைப்புக்கான அடித்தளத்தை ஊன்றியவர். இந்தியாவில் தற்போதும் செயல்பட்டு வரும் முக்கியமான கல்வி மேற்பார்வை அமைப்புகளான AICTE மற்றும் UGC ஆகியவற்றை நிறுவியர் இவரே. மேலும், இந்தியாவின் முதல் ஐஐடியான ஐஐடி கரக்பூரையும் 1951ம் ஆண்டு இவரே நிறுவினார். இவை தவிர இந்தியாவின் முக்கிய அமைப்புகளான ICCR, சாகித்ய அகாடமி, லலித் கலா அகாடமி, சங்கீத நாடக அகாடமி மற்றும் CSIR உள்ளிட்ட அமைப்புகளும் இவரது மேற்பார்வையின் கீழேயே நிறுவப்பட்டன.
தேசிய கல்வி தினம் அங்கீகரிப்பு:
சுதந்திர இந்தியாவில் கல்வித்துறையில் அபுல் கலாம் ஆசாத்தின் பங்களிப்புகளைப் போற்றவே அவருடைய பிறந்த தினமான நவம்பர் 11, தேசிய கல்வி தினமாக மத்திய கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இந்தியாவில் கல்வி கற்பதற்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகளை நிறுவியது மட்டுமின்றி, கிராமப்புற ஏழை மக்கள் மற்றும் பெண்கள் கல்வியறிவு பெறுவதில் அதிக கவனம் செலுத்தியவர் ஆசாத். 14 வயது வரை இலவசமாகவும் கட்டாயக் கல்வியையும் அமல்படுத்தியவரும் அபுல் கலாம் ஆசாத் தான். அனைவருக்கும் தொடக்க கல்வியை கொண்டு சேர்த்தவர் இவருக்கு, இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1992ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. "கனவு கண்டால் தான், அதனை நனவாக்க முடியும்" - மௌலானா அபுல் கலாம் ஆசாத்.