தைத்திருநாள்: மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கலை ஏன் கொண்டாடுகிறோம்?
பொங்கல் 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த பண்டிகை முதல் நாள் போகி பண்டிகையுடன் ஆரம்பித்து, தைப்பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கலுடன் முடிவடைகிறது. போகி மற்றும் பொங்கலை ஏன் கொண்டாடுகிறோம் என்பதை இதற்கு முந்தைய பதிவில் ஏற்கனவே பார்த்தோம். எனவே, இப்போது மாட்டு பொங்கலை ஏன் கொண்டாடுகிறோம் என்பதை பார்க்கலாம். பொங்கலின் 4 நாட்களுமே ஒருவகையில் அறுவடையுடன் தொடர்புடையது. தை முதல் நாள் அறுவடை செய்தவுடன், பயிர்களுக்கு உயிர் கொடுத்த இயற்கைக்கும் சூரியனுக்கும் நன்றி தெரிவிப்பதற்காக தை பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள், விவசாயிகளின் தோழனாக இருந்து விவசாயத்திற்கு உதவிய மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் தினமாகும். அதையே நாம் மாட்டு பொங்கல் என்று அழைக்கிறோம்.
நாகரீக மனிதர்கள் மாட்டு பொங்கலை எப்படி கொண்டாடுகின்றனர்?
மாட்டு பொங்கலின் போது வீடுகளில் உள்ள மாடுகள், நாய்கள் மற்றும் பிற விலங்குகளை குளிக்க வைத்து, அவைகளுக்கு குங்கும பொட்டு வைத்து, பொங்கல் சமைத்து அவைகளுக்கு கொடுப்பது காலம் காலமாக செய்து வரும் வழக்கமாகும். தற்போதைய காலகட்டத்தில் பலர் வீட்டில் உள்ள விலங்குகளுக்கும், பறவைகள், தெரு நாய்கள் போன்ற வெளி விலங்குகளுக்கும் நல்ல உணவளித்து இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். சிலர் கோவிலுக்கு சென்று அங்குள்ள பசுக்களுக்கும் காளைகளுக்கும் உணவளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். மாட்டு பொங்கலுக்கு அடுத்த நாள் காணும் பொங்கல் ஆகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களை சென்று காண்பது தான் இந்த பொங்கல் நாளின் சிறப்பு. காணும் பொங்கலின் போது, பிரியமான உணவுகளை எடுத்து கொண்டு உறவினர்கள்/நண்பர்களுடன் சுற்றுலா செல்வதும் ஒரு வழக்கமாகும்.