
150-க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் முடக்கம், ஏன்?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவிற்கு எதிரான உள்ளடக்கங்களை வெளியிட்டதாகக் கூறி கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களை, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒரு இந்தத் தகவலை தற்போது பகிர்ந்திருக்கிறார்.
தகவல் தொழில்நுட்பச் சட்டம், பிரிவு 69A-வின்படி இந்தியா நாட்டின் இறையாண்மை, நேர்மை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக எந்த டிஜிட்டல் தளத்தினையும் முடக்கும் அதிகாரத்தை மத்திய அரசு பெற்றிருக்கிறது.
மேற்கூறிய இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களை, பொய்யான தகவல்களைப் பரப்பியது மற்றும் இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ளடக்கங்களை வெளியிட்டது, உள்ளிட்ட காரணங்களுக்காக முடக்கியதாகத் தெரிவித்திருக்கிறது தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம்.
இந்தியா
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியது என்ன?
2021 முதல் 2022 காலத்தில் மட்டும் 78 யூடியூப் சேனல்கள் மற்றும் 560 யூடியூப் லிங்க்குகளை முடக்கியதாக, கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் மட்டுமல்லாது, பொய்யான தகவல்களைப் பரப்பி மக்களை திசைதிருப்பும் எந்தவிதமான சமூக வலைத்தள கணக்கா இருந்தாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானைச் சேர்ந்த 35 யூடியூப் சேனல்களை இந்தியாவில் மத்திய அரசு முடக்கியது குறிப்பிடத்தக்கது.