இந்திய குடியுரிமையை துறந்து வெளிநாடுகளுக்கு குடிபெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியா: கடந்த ஐந்தரை ஆண்டுகளில், அதாவது ஜனவரி 2018 முதல் ஜூன் 2023க்குள் ஏறக்குறைய 8.40 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்து, பல்வேறு வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். நடப்பு ஆண்டின் முதல் பாதியில், 87,026 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில், இந்தியக் குடியுரிமையைத் துறந்தவர்களின் எண்ணிக்கை 2,25,620 ஐ எட்டியது. கடந்த 12 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மிக அதிகமான எண்ணிக்கை இதுவாகும். "கடந்த இரண்டு தசாப்தங்களில் பணிக்காக இடம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது" என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கடந்த மாதம் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கூறியிருந்தார்.
குடிபெயர்பவர்களுக்கு முதன்மையான விருப்பமாக அமெரிக்கா உள்ளது
ராஜ்யசபா எம்.பி சந்தீப் குமார் பதக்கின் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், சமீபத்தில், இந்த தகவலை வெளியிட்டது. இப்படி குடியுரிமை துறந்து, வெளிநாடுகளுக்கு குடிபெயர்பவர்களுக்கு முதன்மையான விருப்பமாக அமெரிக்கா உள்ளது. அதைத் தொடர்ந்து, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் அதிகமான இந்தியர்கள் குடிபெயர்கின்றனர். கடந்த ஐந்தரை ஆண்டுகளில், 3.29 லட்சம் இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர். கனடா 1.62 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது. 1.32 லட்சம் இந்தியர்கள் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்துள்ளனர். இங்கிலாந்து 83,468 இந்தியர்களையும், இத்தாலி 23,817 இந்தியர்களையும் ஏற்றுக்கொண்டுள்ளது. கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இந்திய குடியுரிமையை துறந்தவர்களில் 85%க்கும் அதிகமானவர்கள் இந்த ஐந்து நாடுகளுக்கும் தான் குடிபெயர்ந்துள்ளனர்.