Page Loader
திருமணம் செய்துகொள்ள அனைவருக்கும் அடிப்படை உரிமை உள்ளதா: ஒரே பாலின திருமண விவாதம் 
தீண்டாமை நாம் பின்பற்றி வந்த ஒரு மரபு தான், அது ஒழிக்கப்படவில்லையா: நீதிபதி பாட்

திருமணம் செய்துகொள்ள அனைவருக்கும் அடிப்படை உரிமை உள்ளதா: ஒரே பாலின திருமண விவாதம் 

எழுதியவர் Sindhuja SM
May 09, 2023
07:27 pm

செய்தி முன்னோட்டம்

ஒரே பாலின திருமணங்களுக்கான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று(மே 9), திருமணம் செய்துகொள்ள அடிப்படை உரிமை உள்ளதா, இல்லையா என்று கேள்வி எழுப்பியது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதியிடம் இந்த கேள்வியை கேட்டது. இதற்கு பதிலளித்த வழக்கறிஞர் திவேதி, தங்கள் வழக்கம், தனிப்பட்ட சட்டம் மற்றும் மதத்தின்படி எதிர் பாலின தம்பதிகளுக்கு திருமணம் செய்து கொள்ள உரிமை உண்டு என்று கூறினார். "அரசியலமைப்பின் கீழ் திருமணம் செய்துகொள்ள உரிமை உள்ளது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால் அது உங்கள் கருத்துப்படி ஒரே பாலின தம்பதிகளுக்கு கிடையாது. அது தான் உங்கள் வாதமா?" என்று தலைமை நீதிபதி மீண்டும் கேள்வி எழுப்பினார்.

details

தீண்டாமை நாம் பின்பற்றி வந்த ஒரு மரபு தான்: நீதிபதி பாட் 

அதற்கு பிறகு பேசிய நீதிபதி ரவீந்திர பாட், "வழக்கம், கலாச்சாரம், மதத்தை ரீவைண்ட் செய்து பார்த்தால் 50 ஆண்டுகளுக்கு முன்பு சாதி-கலப்பு திருமணங்கள் அனுமதிக்கப்படவில்லை. மத-கலப்பு திருமணங்கள் பற்றி நாம் கேள்விப்பட்டது கூட இல்லை. எனவே, திருமணத்தின் சூழல் மாறிவிட்டது." என்று கூறினார். மேலும், "நீங்கள் பாரம்பரியத்தை பற்றி பேச தொடங்கினால், அரசியலமைப்பே ஒரு பாரம்பரியத்தை உடைக்கும் முறை தான். நமது சமூகத்தில் சாதியின் அடிப்படையில் எது புனிதப்படுத்தப்பட்டது? தீண்டாமை நாம் பின்பற்றி வந்த ஒரு மரபு தான். அந்த தீண்டாமையை அரசியலமைப்பில் இருந்து தடை செய்ய உணர்வுபூர்வமான ஒரு முடிவை நாங்கள் எடுத்தோம்" என்று தெரிவித்தார்.