திரும்பப்பெறும் 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி என்ன செய்யும்?
கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. செப் 30-ம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. சரி, இந்த திரும்பப்பெறும் ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி என்ன செய்யும்? ரிசர்வ் வங்கி திரும்பப்பெறும் ரூபாய் நோட்டுக்கள் உண்மையானவையா அல்லது போலியா என்பகு இயந்திரம் மூலம் சோதனை செய்யப்படும். ஒரு மணி நேரத்தில் 50,000 முதல் 60,000 நோட்டுக்கள் வரை சோதனை செய்யும் இயந்திரங்களை வைத்திருக்கிறது ரிசர்வ் வங்கி. பின்னர், குறிப்பிட்ட அளவுகோள்களை வைத்து சரியான நோட்டுக்கள் மற்றும் சரியில்லாத நோட்டுக்கள் என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்
எந்த அடிப்படையில் பிரிக்கப்படுகிறது?
ஒரு ரூபாய் நோட்டில் எந்த அளவிற்கு அழுக்கு படிந்திருக்கிறது, அதன் ஓரங்கள் மடங்கியிருக்கிறதா, அதன் உறுதிதன்மை எவ்வளவு இருக்கிறது, கிழிசலின் அளவு, ஓட்டைகளின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் சரியான நோட்டுக்கள் மற்றும் சரியில்லாத நோட்டுக்களாகப் பிரிக்கப்படும். சரியான நோட்டுக்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு புதிய ரூபாய் நோட்டுக்களாக மாற்றப்படும். சரியில்லாத நோட்டுக்களை முன்னர் எரித்து வந்தது ரிசர்வ் வங்கி. ஆனால், அதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதால் அதனை கிழித்து, பெரிய துண்டுகளாக்கி பிற நிறுவனங்களுக்கு எரிபொருளாக விற்பனை செய்துவிடும். 2016-ல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தபின், அவை வெஸ்டர்ன் இந்தியா பிளைவுட்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்த முறையில் விற்பனை செய்யப்பட்டது.