லட்சங்களில் வருமானம்: தமிழக முதல்வராக விஜய் பெறப்போகும் ஊதியம் எவ்வளவு?
செய்தி முன்னோட்டம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தவெக தலைவர் விஜய், விரைவில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். தனித்துப்போட்டியிட்டுப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை நெருங்கியுள்ள அவர், பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளார். சினிமாவில் ஒரு படத்திற்கு சுமார் ₹275 கோடி வரை சம்பளம் வாங்கிய விஜய், இனி முதலமைச்சராக மாதம் ₹2,05,000 மட்டுமே ஊதியமாகப் பெறுவார். ஊதியம் குறைந்தாலும், இசட் பிளஸ் பாதுகாப்பு, அரசு இல்லம் மற்றும் சிறப்பு வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு உயர்தர சலுகைகள் அவருக்கு வழங்கப்பட உள்ளன. திரையுலகில் உச்சநட்சத்திரமாக திகழ்ந்து கோடிகளில் சம்பளம் வாங்கிய விஜய், இனி மக்கள் பணியில் ஒரு அரசு ஊழியராகப் பெறப்போகும் ஊதியம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் சம்பளம்
ரூ. 200 கோடியில் இருந்து ரூ. 2 லட்சத்திற்கு
திரையுலகில் விஜய்யின் ஊதிய வளர்ச்சி மிகவும் வியப்பிற்குரியது. தனது முதல் படமான 'வெற்றி' திரைப்படத்திற்கு ரூ. 500 சம்பளம் வாங்கிய விஜய், தனது கடைசிப் படமான 'ஜனநாயகன்' படத்திற்கு ரூ. 220 முதல் ரூ. 275 கோடி வரை ஊதியமாகப் பெற்றுள்ளார். கடந்த 5-6 வருடங்களாக ஆண்டுக்கு ஒரு படத்தில் நடிப்பதன் மூலம் குறைந்தபட்சம் ரூ. 150 முதல் ரூ. 200 கோடி வரை வருமானம் ஈட்டி வந்தார். தற்போது முழுநேர அரசியலில் இறங்கியுள்ள அவருக்கு, தமிழக முதலமைச்சராக மாதம் ரூ. 2,05,000 மட்டுமே சம்பளமாக வழங்கப்படும். அதாவது, ஆண்டுக்கு சுமார் ரூ. 24.6 லட்சம் மட்டுமே அவர் ஊதியமாகப் பெறுவார்.
இசட் பிளஸ் பாதுகாப்பு
முதல்வருக்கான சலுகைகள்
சம்பளம் குறைவாக இருந்தாலும், முதலமைச்சர் என்ற பொறுப்பிற்கு அரசு சார்பில் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. குண்டு துளைக்காத சிறப்பு வாகனங்கள் மற்றும் இசட் பிளஸ் (Z+) அந்தஸ்து பாதுகாப்பு வழங்கப்படும். அரசு சார்பில் தங்குவதற்கு இல்லம், அலுவலகம் மற்றும் வீட்டிற்குத் தேவையான பணியாளர்களின் ஊதியத்தை அரசே ஏற்கும். தனி ஹெலிகாப்டர் வசதி, விமானப் பயணச் செலவுகள் மற்றும் பிற பயணச் செலவுகளை முழுமையாக அரசு ஏற்கும். முதல்வர் மற்றும் அவரது குடும்பத்திற்கான மருத்துவக் காப்பீடு, இல்லம் மற்றும் அலுவலகங்களுக்கான தொலைத்தொடர்பு வசதிகள் அரசு சார்பில் செய்து தரப்படும்.