டெல்லியில் தரையிறங்கினார் பிரதமர் மோடி: பாஜக தலைவர்கள் வரவேற்பு
அமெரிக்கா மற்றும் எகிப்து பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று(ஜூன் 25) நள்ளிரவு டெல்லியில் வந்து தரையிறங்கினார். டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி மற்றும் பாஜக தலைவர் நட்டா ஆகியோர் வரவேற்றனர். ஹர்ஷ் வர்தன், ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் மற்றும் கவுதம் காம்பீர் போன்ற டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர்களும் கட்சி எம்.பி.க்களும் இதில் கலந்து கொண்டனர். பிரதமர் இந்தியாவில் வந்திறங்கியதும் அங்கு கூடி இருந்த தலைவர்களிடம், இந்தியாவில் என்ன நடக்கிறது என்று கேள்வி எழுப்பினார். "அவர் எங்கள் அனைவரையும் கேட்ட முதல் கேள்வி, வேலை எப்படி போகிறது, இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதுதான்" என்று ஒரு பாஜக எம்.பி தெரிவித்திருக்கிறார்.
நாடு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நட்டா பிரதமருக்கு பதிலளித்தார்
மோடி அரசின் ஒன்பது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சுசாஷன் மற்றும் சேவா என்ற ஒரு மாத கால திட்டத்தை பாஜக தற்போது மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம், மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக பாடுபடுவதே ஆகும். இந்த சுசாஷன் மற்றும் சேவா திட்டம் குறித்தும் பிரதமர் விசாரித்ததாக கூறப்படுகிறது. "இங்கே எப்படிப் போகிறது என்று பிரதமர் நட்டா ஜியிடம் கேட்டார். அதற்கு நட்டா ஜி, தனது ஒன்பது ஆண்டுகால அரசாங்கத்தின் அறிக்கை அட்டையுடன் கட்சித் தலைவர்கள் மக்களைச் சென்றடைகிறார்கள் என்றும், நாடு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் பிரதமருக்கு பதிலளித்தார்" என்று பாஜக எம்பி மனோஜ் திவாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.