படிக கல்லால் உருவாக்கப்பட்ட எடைக்கல் - கீழடி 9ம் கட்ட அகழாய்வில் கண்டெடுப்பு
தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது 9ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சூடுமண்ணால் செய்த விலங்குகளின் உருவங்கள், தங்க அணிகலன்கள், வட்ட சில்லுகள், செப்பு ஊசி, எலும்பால் செய்யப்பட்ட கூர்முனைகள், ஆட்ட காய்கள், உள்ளிட்ட 183 தொல்பொருட்கள் இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது 9ம் கட்ட அகழாய்வில் படிக கல்லால் செய்யப்பட்ட எடைக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி இந்த 9ம் கட்ட அகழாய்வு பணிகள் துவங்கப்பட்டது.
10க்கு மேற்பட்ட குழிகளை தோண்ட முன்னேற்பாடு பணிகள்
மேலும் இங்கு நடந்து வரும் அகழாய்வு பணியில் இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள், கண்ணாடி மணிகள், அஞ்சனக்கோல்கள், உள்ளிட்ட ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. வழக்கமாக இந்த அகழாய்வு பணிகள் ஜனவரி மாதம் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அருங்காட்சியகத்தில் தொல்லியல் பொருட்களை காட்சிப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் தாமதமாக இப்பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அதேபோல், 10 குழிகள் வரை தோண்டப்படுவதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில், இம்முறை அதற்கு மேற்பட்ட குழிகளை தோண்ட தொல்லியல் துறை முடிவு செய்து அதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருவதாக தெரிகிறது. அதில் கிடைக்கும் பொருட்களுக்கு ஏற்பவே, குழிகளின் ஆழம் நிர்ணயிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.