வார இறுதி நாட்கள், கோயில் திருவிழாக்கள்-தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகம் முழுவதும் வார இறுதி விடுமுறை நாட்கள், சுபமுகூர்த்த நாட்கள், கோயில் திருவிழா காலங்கள் என்பதன் காரணமாக தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம், இன்று(ஜூலை.,21) 600 சிறப்பு பேருந்துகளை இயக்கப்போவதாக தெரிவித்துள்ளது. வார இறுதி நாட்கள் என்றாலே பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணம் மேற்கொள்வது வழக்கம். அதுவும் தற்போது சுபமுகூர்த்த நாட்கள், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்டவையும் தொடர்ந்து வருவதால் வழக்கத்தினை விட பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் எவ்வித சிரமுமின்றி தங்கள் பயணத்தினை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடவேண்டியவை.
கூடுதல் பேருந்துகள் இயக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
இந்த சிறப்பு பேருந்துகள், இன்று முதல் வரும் ஜூலை.,24(திங்கட்கிழமை) வரை இயக்க திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் செய்து வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி சென்னையில் இருந்து இன்று தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு வழக்கமாக இயங்கக்கூடிய பேருந்துகளோடு கூடுதலாக 300 பேருந்துகளும், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களிலிலுருந்து மற்ற முக்கிய இடங்களுக்கும், பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கும் கூடுதலாக 300 பேருந்துகள் என மொத்தம் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.